பிரான்ஸ் நாட்டின் அப்பயி டிஸ் வோக்ஸ்-டி-செர்னே நகரில் ஜி7 வெளியுறவு துறை அமைச்சர்களுக்கான கூட்டம் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது. இதில் உறுப்பு நாடுகள் பங்கேற்றன.
இந்தக் கூட்டத்தில், மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையைப் பற்றி விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஹோர்ர்மூஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இணைந்து பணியாற்ற நெருங்கிய ஒருங்கிணைப்பை தொடரும் விதமாக உறுப்பு நாடுகள் ஒப்புதல் தெரிவித்தன.
இதற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, “ஈரானின் அனைத்து இராணுவ திறன்களையும், அவற்றில் உள்ள கடற்படை, விமானப்படை, ஏவுகணைகள் மற்றும் ஏவுகலன்களை நாங்கள் அழித்து விடுவோம். எந்தவித தரை படை தாக்குதல் இல்லாமலேயே இதைச் சாதிப்போம்,” என்று தெரிவித்துள்ளார்.
மேற்காசியாவில், மோதலை முன்னிட்டு, 82-வது விமான படை பிரிவின் ஆயிரக்கணக்கான வீரர்களை அமெரிக்கா குவிக்க தயாராகி வருகிறது. சில மாதங்கள் அல்ல, இன்னும் சில வாரங்களிலேயே மோதல் முடிவுக்கு வரும் என ரூபியோ குறிப்பிட்டார்.
வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையின் செய்தியின் படி, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழ்நிலையில் கூடுதலாக 10 ஆயிரம் வீரர்களை அனுப்ப அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது. அனுப்பப்படும் படை தொகுதியில் கவச வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் போன்ற இராணுவ உபகரணங்களும் இடம்பெறும்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெறுவதால் ஏப்ரல் 6-ஆம் திகதி வரை ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் மேற்கொள்ளாது என டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்தக் காலத்தில் ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான எந்தவித இராணுவ தாக்குதல்களும் நடைபெறாது.





