மருத்துவத் துறையில் ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும் வகையில், உயிரிழந்தபெண்ணிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பையைப் (Womb) பொருத்தி, அதன் மூலம் பிரித்தானியாவில் முதல் முறையாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
லண்டனில் உள்ள குயீன் சார்லோட்ஸ் மற்றும் செல்சியா வைத்தியசாலையில் கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது. இந்த குழந்தை 3.1 கிலோ கிராம் எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது.
குழந்தையின் தாயான 30 வயதுடைய கிரேஸ் பெல், பிறப்பிலேயே ‘MRKH’ எனும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டவர். இதனால் அவருக்குக் கருப்பை வளர்ச்சி அடையவில்லை.
“இது ஒரு நிஜமான அதிசயம். என்னால் ஒருபோதும் தாயாக முடியும் என்று நான் நினைத்ததே இல்லை. இப்போது நான் என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கிறேன்,” என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கிரேஸின் கணவர் ஸ்டீவ் பவல், தனது மனைவியின் இந்த நீண்ட காலப் போராட்டத்தில் உறுதுணையாக இருந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணொருவரின் கருப்பை கிரேஸிற்குப் பொருத்தப்பட்டது. அந்தக் கொடையாளியின் மூலம் கருப்பை மட்டுமல்லாது, மேலும் 05 உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 4 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
“தனது மகளை இழந்த துயரம் எங்களை வாட்டினாலும், அவளது கடைசி ஆசை ஒருவருக்கு உயிர் கொடுப்பதாக அமைந்தது எங்களுக்குச் சற்று ஆறுதலைத் தருகிறது,” எனத் தானம் வழங்கிய பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
உயிருடன் இருப்பவர்களிடம் இருந்து கருப்பையைப் பெற்று பிரித்தானியாவில் ஏற்கனவே குழந்தை பிறந்துள்ளது. ஆனால், உயிரிழந்தவரிடம் இருந்து பெறப்பட்ட கருப்பை மூலம் குழந்தை பிறப்பது இதுவே முதல் முறையாகும்.
ஐரோப்பாவிலேயே இத்தகைய முறையில் குழந்தை பிறப்பது இது மூன்றாவது முறையாகும்.
இந்த வெற்றி, கருப்பை இன்றித் தவிக்கும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.




