“எமது ட்ரோன் தொழில்நுட்பம் உங்களுக்கு உதவும்” ; சவூதி அரேபியாவுக்கு சென்றார் ஜெலன்ஸ்கி

உக்ரேன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வியாழக்கிழமை (26) சவுதி அரேபியாவைச் சென்றடைந்தார்.

ஈரான் – இஸ்ரேல் போரினால் வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், உக்ரேனின் நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தை வழங்க அவர் முன்வந்துள்ளார்.

சவுதி அரேபியத் தலைவர்களுடனான சந்திப்பின் போது, ரஷ்யாவுடனான போரில் உக்ரேன் பெற்றுக்கொண்ட ட்ரோன் போர்முறை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஜெலன்ஸ்கி விருப்பம் தெரிவித்துள்ளார்.

“வளைகுடா பிராந்தியத்தின் எரிசக்தி பாதுகாப்பு உலகளாவிய சந்தையைத் தீர்மானிக்கிறது. எமது ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் ரேடார் ஒருங்கிணைப்பு அனுபவங்கள் உங்களது வான் பாதுகாப்பை பலப்படுத்தும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரேனின் ட்ரோன் தொழில்நுட்பத்திற்குப் பதிலாக, உக்ரேனுக்குத் தேவையான வான் பாதுகாப்பு ஏவுகணைகளை மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்வதே ஜெலன்ஸ்கியின் முக்கிய நோக்கமாகும்.

சவுதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் உக்ரேனின் ட்ரோன் உற்பத்தி நிறுவனங்களை ஏற்கனவே அணுகியுள்ளன. ட்ரோன் எதிர்ப்பு மின்னணு போர்முறை அமைப்புகளைத் தயாரிக்கும் உக்ரேன் நிறுவனங்கள், வளைகுடா நாடுகளிடமிருந்து பல கோரிக்கைகள் வந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.

எனினும், இவை வெறும் வணிகம் மட்டுமல்லாது இராஜதந்திர விவகாரம் என்பதால், உக்ரேன் அரசாங்கத்தின் இறுதி அனுமதிக்காக அந்நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

ஈரான் மீதான போர் தீவிரமடைந்துள்ளதால், உக்ரேனுக்கு வழங்கத் திட்டமிட்டிருந்த சில அதிநவீன ஆயுதங்களை வளைகுடா பிராந்தியத்திற்குத் திசைதிருப்ப அமெரிக்க பென்டகன் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் இந்த நகர்வால் உக்ரேனுக்கான ஆயுத விநியோகம் குறையக்கூடும் என்பதால், வளைகுடா நாடுகளுடன் நேரடியாக ஆயுதப் பரிமாற்ற ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள ஜெலன்ஸ்கி அவசரம் காட்டி வருகிறார்.