சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்!

அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட  தாக்குதலுக்குப் பதிலடியாக, சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பு மீது அமெரிக்க இராணுவம் பாரிய தாக்குதலை  மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய சிரியாவில் உள்ள 70க்கும் மேற்பட்ட ஐஎஸ் ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பு குழுக்களை குறிவைத்து போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் பீரங்கிகள் தாக்கியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி பால்மைரா நகரில் நடந்த ஐஎஸ் ஐஎஸ் தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவிலியன் மொழிபெயர்ப்பாளரும் கொல்லப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, ஐஎஸ் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் இந்த தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தோ-பசிபிக் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை நிர்வகிக்கும் அமெரிக்க மத்திய கட்டளைப்படையான சென்ட்காம் தனது எக்ஸ் தளத்தில் ஒபரேஷன் ஹாக்கி ஸ்டிரைக் வெள்ளிக்கிழமை கிழக்கு நேரப்படி 4:00 மணிக்கு (21:00 GMT) தொடங்கப்பட்டதாகக் தெரிவித்துள்ளது.

அதேநேரம், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவிக்கையில், ஐஎஸ் போராளிகள், உட்கட்டமைப்பு மற்றும் ஆயுதத் தளங்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு குறித்த தாக்குதல் நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்கா, நமது மக்களைப் பாதுகாக்க ஒருபோதும் தயங்காது மற்றும் பின்வாங்காது என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.