சுற்றுலா வீசாக்களில் ஈரானியர்கள் நாட்டுக்குள் நுழைய தற்காலிகமாக தடை – அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய அரசாங்கம் ஈரானியப் பிரஜைகள் சுற்றுலா வீசாக்களின் கீழ் நாட்டிற்குள் நுழைவதை தற்காலிகமாகத் தடை செய்துள்ளதாக அந்நாட்டின் உள்நாட்டு அமைச்சர் டோனி பர்க் இன்று புதன்கிழமை (25) அறிவித்துள்ளார்.

நாளை வியாழக்கிழமை (26) முதல் நடைமுறைக்கு வரும் இந்தத் தடை உத்தரவு, அடுத்த ஆறு மாத காலத்திற்கு அமுலில் இருக்கும்.

சுற்றுலாப் பயணிகளாக அவுஸ்திரேலியாவிற்கு வருவோர், தமது வீசா காலம் முடிந்த பின்னரும் தாயகம் திரும்ப முடியாமல் அல்லது திரும்ப விரும்பாமல் போகலாம் என்ற அச்சத்தின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சுமார் 7,000 ஈரானியர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருவதற்கான தற்காலிக வீசாக்களைக் கொண்டுள்ளனர். இவர்களது வருகை இந்த உத்தரவின் மூலம் உடனடியாகத் தடுக்கப்பட்டுள்ளது.

நீண்டகால வீசாக்களைக் கொண்டிருப்போர் மற்றும் அவுஸ்திரேலியாவில் வாழ்க்கைத் துணை அல்லது பிள்ளைகளைக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இம்மாத ஆரம்பத்தில், அவுஸ்திரேலியாவிற்கு வந்திருந்த ஈரானியப் பெண் கால்பந்து அணியின் ஏழு வீராங்கனைகள் அரசியல் தஞ்சம் கோரியிருந்தனர். எனினும், பின்னர் அவர்களில் ஐவர் அந்த முடிவைக் கைவிட்டுத் தாயகம் திரும்பினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்தே, சுற்றுலா வீசாக்களின் கீழ் வருவோர் தஞ்சம் கோருவதைத் தடுக்க இந்த புதிய சட்டம் அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.