ஜப்பானின் தெற்கு கடலோர நகரமான ஓய்டாவில் உள்ள சாகனோசெக்கி பகுதியில் நேற்று (18) மாலை திடீரென தீ பரவியதில் 170க்கும் மேற்பட்ட கட்டடங்கள், வீடுகள், கடைகள் தீயில் எரிந்து பெருமளவு சேதங்களை எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என தீயில் எரிந்த வீடொன்றிலிருந்து மனித உடல் எச்சங்களை கண்டுபிடித்த அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரவு முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு தேசிய தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிகத் தீவிரமாக தீ பரவிய காரணத்தினால் நேற்று மாலை 200க்கு மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், அப்போது வீசிய பலத்த காற்று தீ பரவலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
தீ விபத்தில் சிக்கி 50 வயதுடைய பெண்ணொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் 70 வயதுடைய ஆண் ஒருவரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, தீயில் முற்றாக எரிந்துவிட்ட வீடொன்றில் நபரொருவரின் உடலின் எரிந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த உடல் எச்சங்கள் காணாமல்போன நபருடையதா என்பதை கண்டறியும் முயற்சிகளிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
புதன்கிழமை பிற்பகல் 1.43 மணி நிலைவரத்தின் அடிப்படையில், இத்தீ விபத்து காரணமாக சாகனோசெக்கி பகுதியில் சுமார் 270 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹெலிகொப்டர் மூலம் கள நிலைமையை கண்டறியவும் வான்வழியாக நீரைப் பாய்ச்சி தீயை கட்டுப்படுத்துவதற்குமான பணிகளைத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
1976ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானில் ஏற்பட்ட மிகப் பெரிய தீ விபத்து இதுவென்றும் தெரிவிக்கப்படுகிறது.



