தாய்லாந்தில் ரயில் மீது கிரேன் சரிந்து வீழ்ந்ததில் 22 பேர் பலி ; 80க்கு மேற்பட்டோர் படுகாயம்

தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் பயணிகள் ரயில் மீது கிரேன் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் சுமார் 22 பேர் உயிரிழந்ததாகவும் கிட்டத்தட்ட 80 பேர் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று (14) காலை பெங்கொக் நகரிலிருந்து உபோன் ரத்சதானி மாகாணத்தை நோக்கி புறப்பட்ட இந்த ரயில், நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பகுதியில் ரயில் பாதையில் அதிவிரைவு ரயில் திட்டத்துக்கான பணிகள் நடந்து வரும் நிலையில், அப்பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட கிரேன் திடீரென சரிந்து ரயிலின் மீது விழுந்துள்ளது.

இதனால் ரயில் தடம் புரண்டு, அதில் பயணித்த 22 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 80 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிரேன் மோதியதில் ரயிலின் மூன்று பெட்டிகளிலேயே உயிரிழந்தவர்கள் இருந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அந்த ரயிலில் 195 பயணிகள் இருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் குறிப்பிடப்படுகிறது.

கிரேன் மோதி ரயில் தடம் புரண்டபோது அதில் தீ பரவியதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.