திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி

அமெரிக்க இராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் ரேண்டி ஜார்ஜ் (General Randy George) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) உடனான கடும் மோதலே இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2023ஆம் ஆண்டு முன்னாள்  ஜனாதிபதி ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட ஜெனரல் ஜார்ஜ், 2027 வரை பதவியில் இருக்க வேண்டியவர். ஆனால், தற்போதைய ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அவர் கட்டாய ஓய்வு பெற பணிக்கப்பட்டுள்ளார்.

தகுதியான நான்கு இராணுவ அதிகாரிகளுக்கு ஜெனரல் பதவி உயர்வை வழங்க பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

 

ஆனால், அவர்களின் சிறந்த சேவையைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என ஜெனரல் ஜார்ஜ் பிடிவாதமாக இருந்ததே மோதலுக்கு முக்கிய புள்ளியாக அமைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ட்ரம்ப் மற்றும் ஹெக்செத் ஆகியோரின் இராணுவ தொலைநோக்குப் பார்வைக்கு இணங்கிச் செயல்படும் ஒருவரை தளபதியாக நியமிக்க பென்டகன் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நடந்து வரும் இக்கட்டான சூழலில் இந்த நீக்கம் இடம்பெற்றுள்ளது.

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கப் படைகள் தமது இலக்குகளை நெருங்கிவிட்டதாகவும், பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளதாகவும் ஜனாாிபதி ட்ரம்ப் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய போர்ச் சூழலில் அமெரிக்க இராணுவத்தின் மூத்த தளபதி நீக்கப்பட்டது இராணுவ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி.. போருக்கு மத்தியில் ட்ரம்ப் நிர்வாகத்தில் குழப்பநிலை! | Fallout Cost Us Army Chief Randy George His Job

ஜெனரல் ஜார்ஜ் மட்டுமல்லாது, மேலும் பல முக்கிய அதிகாரிகளும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தில் பணியாற்றிய ஜார்ஜ், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் முக்கிய பங்காற்றியவர்.

இவரது பதவிக்காலத்தில் இராணுவத்தில் ஆள்சேர்ப்பு நெருக்கடியைச் சீர்செய்ததுடன், உக்ரைன் போரில் முக்கியத்துவம் பெற்ற குறைந்த விலை ட்ரோன்கள் மற்றும் AI தொழில்நுட்பங்களை அமெரிக்க இராணுவத்தில் உட்படுத்தியுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத், இராணுவத்தில் உள்ள நான்கு நட்சத்திர ஜெனரல்களின் எண்ணிக்கையை 20 சதவீதத்தால் குறைக்க உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த உயர்நிலை அதிகாரிகளின் நீக்கம் அமெரிக்க இராணுவக் கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.