திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணால் 350 அடி பள்ளத்தில் தள்ளிக் கொல்லப்பட்ட இளம் தொழிலதிபர்!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் தொழிலதிபரை (வயது 26), அவரது வருங்கால மனைவியே தனது காதலனுடன் சேர்ந்து 350 அடி பள்ளத்தில் தள்ளிப் படுகொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிராவில் இடம்பெற்றுள்ளது. இக்கொலையுடன் தொடர்பான வழக்கில் குறித்த பெண்ணையும் (வயது 20) அவரது காதலனையும் (வயது 22) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தற்செயலாக இடம்பெற்ற ஒரு விபத்து என்று மூடி வைக்கப்படவிருந்த இந்த வழக்குக் கோப்பு, உயிரிழந்த இளைஞரது சகோதரி உள்ளிட்டோர் பொலிஸாரிடம் எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொலை வழக்கு ஆவணமாக மாற்றப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து வருகிறது.

இந்தக் கொலை தொடர்பில் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணைகள் மற்றும் கைது செய்யப்பட்ட பெண்ணும் அவரது காதலனும் அளித்த வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி,

புனே நகரைச் சேர்ந்த தொழிலதிபருக்கும் குறித்த பெண்ணுக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பெண் தனது காதலனை மணம் முடிக்க நினைத்ததால், தனக்கு நிச்சயிக்கப்பட்ட நபரை கொல்ல திட்டமிட்டதன் அடிப்படையிலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளது என பொலிஸ் தரப்பு தெரிவிக்கிறது.

ஏற்கெனவே இரண்டு முறை கொலை முயற்சிக்கு அந்த பெண் துணிந்தும், அது தோல்வியில் முடிந்திருக்கிறது.

கடந்த மே 31 மற்றும் ஜூன் 14 ஆகிய திகதிகளில் பெண்ணும் தொழிலதிபரும் லோகாகாட் கோட்டைக்கு சென்றுள்ளனர். 14ஆம் திகதி பெண் அந்த நபரை பள்ளத்தில் தள்ளிவிட முயற்சித்துள்ளார். ஆனால், அருகில் உள்ள புதரைப் பற்றிப் பிடித்துக்கொண்டு தொழிலதிபர் உயிர் தப்பிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது கொலை முயற்சியை தொழிலதிபர் கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காக அவ்வேளை அந்தப் பகுதியில் பாம்பு ஒன்று வந்துவிட்டதாக அப்பெண் கூறியுள்ளார்.

அதனையடுத்து, கடந்த ஜூன் மாதம் 18-ஆம் திகதி மூன்றாவது முறையாக முயற்சித்து, அப்பெண், தனக்கு நிச்சயிக்கப்பட்ட நபரை, லோகாகாட் கோட்டைக்கு அழைத்துச் சென்று மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.

அங்கு மறைந்திருந்த காதலனுடன் தானும் சேர்ந்து, அந்த நபரை 350 அடி ஆழமுடைய பள்ளத்தில் தள்ளி கொலை செய்துள்ளனர்.

பின்னர், செல்ஃபி எடுக்கும்போது அந்த நபர், தவறி பள்ளத்தில் விழுந்துவிட்டதாக குறித்த பெண் பொலிஸார் மற்றும் ஏனையவர்களிடம் தெரிவித்துள்ளார்.

காட்டிக்கொடுத்த 2,004 கைப்பேசி  அழைப்புகள் 

பள்ளத்தில் விழுந்து நபர் உயிரிழந்த சம்பவம் வெறும் விபத்து என பதிவு செய்யப்பட்டு, அந்தக் கோணத்திலேயே பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை தொடங்கியிருந்தனர்.

இந்நிலையில், நபர் உயிரிழந்து 4 நாட்கள் கழித்து, அவரது வீட்டுக்கு துக்கம் பகிர்ந்துகொள்வதற்காக, திருமணம் முடிக்க நிச்சயிக்கப்பட்டவர் என்ற ரீதியில் குறித்த பெண் சென்றுள்ளார்.

அப்போது உயிரிழந்த தொழிலதிபரின் சகோதரி கேட்ட கேள்விகளுக்கு அப்பெண் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே, தொழிலதிபரின் குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர், அவர்கள், பெண்ணின் நிலைப்பாட்டில் தமக்கு எழுந்துள்ள சந்தேகத்தை சுட்டிக்காட்டி, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

அதனையடுத்து, புதிய கோணத்தில் விசாரணைகளை தொடர்ந்த பொலிஸார், பெண்ணின் கைப்பேசியைப் பெற்று, ஆராய்ந்துள்ளனர்.

பொலிஸார் அந்த கைப்பேசியின் ஊடாக சேகரித்த தகவல்களின்படி, பெண்ணும் அவரது காதலனும் இந்த ஆண்டில் மட்டும் 2,004 முறை, மொத்தம் 238 மணித்தியாலங்கள் கைப்பேசியில் உரையாடியிருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கமராக்களையும் பொலிஸார் ஆராய்ந்துள்ளனர். சியா மற்றும் தொழிலதிபர் பயணித்த வாகனத்தை, தலையை மூடும் ஹுடி (Hoodie) ஆடை அணிந்துகொண்டு காதலன் பின்தொடர்ந்து சென்ற காட்சிகள் சிசிரிவியில் தெளிவாக பதிவாகியுள்ளன. இந்த ஜூன் மாதத்தில், அதிகப்படியான வெயில் கொளுத்துகிறபோதும், தலையை மூடும் சட்டை அணிந்து சென்றமை பொலிஸாரின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.

இவ்வாறாக நகர்ந்த தீவிர விசாரணையின்போது, குறித்த பெண்ணும் அவரது காதலனும்  சேர்ந்து தொழிலதிபரை திட்டமிட்டுக் கொலை செய்ததை இருவருமே ஒப்புக் கொண்டனர்.

பெண் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தொழிலதிபருக்கும் குறித்த பெண்ணுக்கும் கடந்த பெப்ரவரி மாதம் ஆடம்பரமாக நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. இந்த ஆண்டின் இறுதியில் ராஜஸ்தான், உதய்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் திருமணம் நடைபெறவிருந்தது. இதற்காக உறவினர்களை அழைத்துச் செல்ல இரண்டு சிறப்பு விமானங்கள் கூட முன்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே திருமணம் நிச்சயிக்கப்பட்ட தொழிலதிபர் கொல்லப்பட்டுள்ளார்.