திறந்தவெளி திருப்பலியில் பாப்பரசரை காண ஸ்பெயின் தலைநகரில் பக்தர்கள் குவிந்தனர்

ஸ்பெயின் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள  உலகளாவிய கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் பாப்பரசர் லியோவின் வருகையைத்தொடர்ந்து, அந்நாட்டு தலைநகர் மத்ரித்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பிரம்மாண்ட திறந்தவெளி கூட்டுத் திருப்பலியில் 10 இலட்சத்திற்கும்  அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பாப்பரசரின் ஸ்பெயின் பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, மத்ரித்தின் புகழ்பெற்ற பிளாசா டி சிபெலெஸ் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த விசேட வழிபாட்டில், ஸ்பெயின் மன்னர்  உள்ளிட்ட அரச குடும்பத்தினரும் உயர்மட்டப் பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக, சனிக்கிழமை ஸ்பெயின் வந்தடைந்த பாப்பரசரை அரச மாளிகையில் வரவேற்ற அரச தம்பதியினர், உலகளாவிய மோதல்களுக்கு எதிராக ஸ்பெயின் அரசாங்கம் எடுத்துவரும் அமைதி முயற்சிகளையும், புலம்பெயர்ந்தோருக்கான மனிதநேய ஆதரவையும் பாராட்டியிருந்தனர்.

இன்றையதினம்  காலை மத்ரித் நகரின் மையப்பகுதி வழியாக பாப்பரசர் தனது விசேட வாகனத்தில் வலம் வந்தபோது, வீதிகளின் இருபுறமும் திரண்டிருந்த இலட்சக்கணக்கான மக்கள் கொடிகளை அசைத்தும், மலர் இதழ்களைத் தூவியும் “பாப்பரசர் வாழ்க” என கோஷமிட்டனர். இந்த நிகழ்வையொட்டி தலைநகரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதியுயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்கு முன்னதாக, சனிக்கிழமை இரவு ரியல் மத்ரிட் கால்பந்து அணியின் சாண்டியாகோ பெர்னாவியூ மைதானத்திற்கு அருகில் நடைபெற்ற நள்ளிரவு விழிப்பு வழிபாட்டில் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

“உலகில் நிலவி வரும் அலட்சியம் மற்றும் சுயநலத்திற்கு எதிராகவும், போரின் வன்முறைகள் மற்றும் பொய்களுக்கு எதிராகவும், நீங்கள் அனைவரும் ஒரு புதிய மனிதநேயத்தை உருவாக்கும் பொறிகளாக மாற வேண்டும்.” என பாப்பரசர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு போப் ஆண்டவர் ஒருவர் ஸ்பெயினுக்கு மேற்கொண்டுள்ள முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் இதுவாகும். தனது இப்பயணத்தின் போது அவர் ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதுடன், கத்தோலிக்கத் திருச்சபைக்குள் பாலியல் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.

மேலும், இந்த வார இறுதியில் பிரதமர் பெட்ரோ சான்செஸுடன் இணைந்து கேனரி தீவுகளுக்குச் செல்லவுள்ள பாப்பரசர், ஐரோப்பாவைச் சென்றடைய முயன்று கடலில் மூழ்கி உயிரிழந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரின் நினைவாக அஞ்சலி செலுத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.