தென்கொரியாவை ‘முழுமையாக அழிப்போம்’ : அமெரிக்காவுடன் பேச்சுக்கு வாய்ப்பு– கிம் ஜாங் உன் கடும் எச்சரிக்கை

வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகியன இணைந்து அடுத்த மாதம் 9ஆம் திகதி முதல் கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், வடகொரியத் தலைவர் கிம் ஜாங் வெளியிட்டுள்ள கடும் எச்சரிக்கை உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியாவின் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியின் 9 ஆவது மாநாடு பியாங்யாங் நகரில் கடந்த ஏழு நாட்களாக நடைபெற்றது. அதன் நிறைவு நாளில் உரையாற்றிய கிம் ஜாங் உன், தென்கொரியாவை “தீராத எதிரி நாடு” என குறிப்பிட்டு, அந்த நாட்டுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை எனத் தெரிவித்தார்.

“எங்களைத் தாக்கும் எந்த முயற்சிக்கும் பதிலாக, அணு ஆயுத பலத்தைக் கொண்டு தென்கொரியாவை முழுமையாக அழிப்போம்” என அவர் எச்சரித்தார்.மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தென்கொரியாவை குறிவைக்கும் நவீன ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை உருவாக்குவதே தங்களது இலக்கு எனவும் கூறினார்.

அதே நேரத்தில், அமெரிக்காவுடன் சுமுகமான உறவைத் தொடர விருப்பம் இருப்பதாகவும், ஆனால் வடகொரியாவை அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் முன்வைத்தார். எங்களை ஒடுக்க முயலும் விரோதக் கொள்கைகளை அமெரிக்கா கைவிட்டால், அவர்களுடன் கைகோர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என கிம் ஜாங் உன் தெரிவித்தார்.

அமெரிக்காவுடனான உறவு அவர்களின் தீர்மானத்தில்தான் உள்ளது என்றும், அமைதி அல்லது மோதல் என்பது அவர்களது தேர்வாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பில், கிம் ஜாங் உன் தனது 13 வயது மகள் கிம் ஜூ ஏ உடன் கலந்து கொண்டார். இருவரும் கறுப்பு நிற உடையில் இராணுவ அணிவகுப்பைப் பார்வையிட்டனர்.

இந்த அணிவகுப்பில் அமெரிக்காவை நேரடியாக குறிவைக்கும் நீண்ட தூர ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்படாதது, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வடகொரியா வாய்ப்பு திறந்துவைத்துள்ளதைக் குறிக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

நீருக்கு அடியில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் டிரோன்கள் மற்றும் விண்வெளியில் உள்ள எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்களைத் தாக்கும் ஆயுதங்கள் உள்ளிட்ட நவீன இராணுவ உபகரணங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.

தென்கொரியாவை திறந்தவெளியில் எதிரியாக அறிவித்துவிட்டு, அமெரிக்காவுடன் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பளித்துள்ள கிம் ஜாங் உன்னின் இந்த புதிய நிலைப்பாடு, ஆசிய பிராந்தியத்தில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.