நடன்ஸ் அணுசக்தி நிலையத்தை அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்கியதாக ஈரான் தகவல்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டின் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரானின் அணுசக்தி அமைப்பு வெளியிட்ட அறிக்கை குறித்து தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று காலை இந்த தாக்குதல் நடந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், கதிரியக்கக் கசிவு குறித்து எந்த தகவலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது நாட்டின் எதிரிகளுக்கு தலைசுற்ற வகை்கும் அடியை கொடுத்ததாக ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி கூறிய நிலையில், சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புதிய அலையை ஈரான் தொடங்கியுள்ளது.

இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் விமானங்களை ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்ததாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ள வளைகுடா நாடுகள் மிதும் ஈரான் தாக்குதலை தொடங்கியுள்ளது. குறிப்பாக, வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளங்களை குறிவைத்து இந்த தொடர் தாக்குதல்களை ஈரான் நடத்தி வருகிறது. இது ஈரானின் 70-வது தொடர் தாக்குதல் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அச்சுறுத்தல்:

ஈரானுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலப்பரப்பில் இருந்து மேலும் ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் ராஸ் அல் கைமா துறைமுக நகரை நொறுக்குவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.

பஹ்ரைன் மீது தாக்குதல்:

ஈரானில் இருந்து ஏவப்பட்ட மேலும் இரண்டு ஏவுகணைகளை பஹ்ரைனின் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்துள்ளன. பிப்.28 முதல் இதுவரை மொத்தம் 143 ஏவுகணைகளையும், 242 ஆளில்லா விமானங்களையும் அழித்துள்ளதாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது.