நைஜீரியாவில் மாணவிகளுக்கான விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த பயங்கரவாத கும்பலால் 25 மாணவிகள் துப்பாக்கிமுனையில் கடத்திக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், 2 மாணவிகள் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிச் சென்று பொலிஸாரிடம் தஞ்சமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரிடம் தஞ்சமடைந்த மாணவியரில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதையடுத்து, அவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமேற்கு நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள மாணவிகளுக்கான பள்ளி விடுதியொன்றில் கடந்த திங்கட்கிழமை (17) அதிகாலை 4 மணியளவில் பயங்கரவாதிக் கும்பலொன்று அத்துமீறி நுழைந்தது.
அந்த கும்பல் விடுதியிலிருந்த 25 மாணவிகளை துப்பாக்கிமுனையில் மிரட்டி, கடத்திக் கொண்டுசென்றுள்ளது.
பயங்கரவாதிகள் மாணவிகளை கொண்டுசெல்ல முற்பட்ட வேளையில், அவர்களை தடுத்து மாணவிகளை காப்பாற்ற முயன்ற விடுதி நிர்வாகி மற்றும் காவலாளியை அந்த கும்பல் சுட்டுக் கொன்றதாக தெரவிக்கப்படுகிறது.
அதனையடுத்து, கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க நைஜீரியா அரசாங்கம் இராணுவத்தை களமிறக்கியதைத் தொடர்ந்து, இராணுவத்தினர் மாணவிகளை உயிருடன் மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கடத்தல் கும்பலிடமிருந்து இரண்டு மாணவிகள் தப்பிச் சென்று பொலிஸாரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.
கடத்தல்காரர்கள் மாணவிகளை புதர்கள் நிரம்பிய விவசாய நிலங்கள் கொண்ட வழியினை கடந்து சென்றபோது இந்த மாணவிகள் இருவரும் தப்பி ஓடியதாகவும், அவ்வாறு தப்பி ஓடும்போது ஒரு மாணவிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அந்த மாணவிகளிடம் பொலிஸார் விசாரணை நடத்தி, அவர்களிடம் தகவல்களைப் பெற்று, பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் ஏனைய மாணவிகளை மீட்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.




