நைஜீரியாவில் கொடூரமான துப்பாக்கிச் சூடு ; 162 பேர் கொலை

நைஜீரியாவின் குவாரா மாநிலத்தில் உள்ள இரண்டு கிராமங்களில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் கும்பலால் நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூடுத் தாக்குதலில் 162 கொல்லப்பட்டதாக  அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை 170க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்போது ஆயுததாரிகள் பாரம்பரிய மன்னரின் இல்லத்தையும் அந்நகரின் பல இடங்களில் உள்ள கடைகள், வீடுகளுக்கும் தீ வைத்துள்ளதாகவும் இதனால் நுகு (Nuku) மற்றும் வோரோவில் (Woro)  வசிப்பவர்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்வதற்காக தப்பி ஓடியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலர் துப்பாக்கிதாரிகளுக்கு மிக அருகில் இருந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் சிலர் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் கூறப்படுகிறது.

இத்தாக்கதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என்றும் சடலங்களை தேடும் பணிகள் தொடர்வதாகவும் செய்திகளில் குறிப்பிடப்படுகின்றன.

நைஜீரியாவில் அடிக்கடி கொள்ளையர்களும் துப்பாக்கிகள் ஏந்திய பயங்கரவாதிகளும் அண்மைக்காலமாக வன்முறைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (3) நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்குப் பின்னணியில்  இஸ்லாமிய போராளிக் குழுவான போகோ ஹராம் (Boko Haram) என்ற அமைப்பு இருப்பதாக நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபு (Bola Tinubu) தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் முகமது உமர் பயோ, ஐ.எஸ் அமைப்புடன் இணைந்த ஆயுதக் குழுவான லகுராவா (Lakurawa) இந்தத் தாக்குதலுக்கு காரணம் என அசோசியேட்டட் ப்ரஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இத்தாக்குதலுக்கு குவாரா மாநில ஆளுநர் அப்துல் ரஹ்மான் அப்துல் ரஸாக் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.