நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கி, எதிர்க்கட்சி அரசியல்வாதி மரியா கோல்ஸ்னிகோவா உட்பட 123 கைதிகளை விடுவித்தது பெலாரஸ்

அமெரிக்கா தடைகளை நீக்கியமையால், நோபல் பரிசு பெற்ற அலெஸ்  பியாலியாட்ஸ்கி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதி மரியா கோல்ஸ்னிகோவா உட்பட 123 கைதிகளை பெலாரஸ் விடுவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெலாரஸுக்கான விசேட தூதுவர் ஜோன் கோலுடன் மின்ஸ்கில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ரஷ்யாவின் நெருங்கிய நண்பரான பெலாரஸுக்கு முக்கியமான ஏற்றுமதிப் பொருளாகவும், உரங்களுக்கு முக்கிய மூலப்பொருளாகவும் காணப்படும் பொற்றாசியம் மீதான தடைகளை நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

“இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்பும்போது, மேலும் மேலும் தடைகள் நீக்கப்படும்” என கோலே தெரிவித்தார்.

பெலாரஷ்யத் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஐரோப்பிய ஒன்றியத்தால் ஜனாதிபதியாக அங்கீகரிக்கப்படவில்லை.

2020 ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்த கோல்ஸ்னிகோவா பெரும்பாலான நேரம் தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில், விடுதலையான பின்னர் பேசிய அவர்,

எனக்கு மிகவும் பிரியமான மக்களைப் பார்த்து கட்டிப்பிடிக்க முடிந்ததில் நம்பமுடியாத மகிழ்ச்சி அடைந்துள்ளேன். எனது சுதந்திரத்தின் முதல் சூரிய அஸ்தமனத்தைக் காண்பது மிகப்பெரிய மகிழ்ச்சி, அது எவ்வளவு அற்புதமான அழகு. ஆனால் இன்னும் விடுதலை பெறாதவர்களைப் பற்றியும் நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து, அனைவரும் விடுதலையாகும் தருணத்திற்காக நான் காத்திருக்கிறேன்.” என்றார்.

கோல்ஸ்னிகோவா 113 கைதிகளுடன் உக்ரேனிடம் ஒப்படைக்கப்பட்டதாக, போர்க் கைதிகளுக்கான சிகிச்சைக்கான கியேவின் ஒருங்கிணைப்புத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

டெலிகிராமில் ஒரு அறிக்கையில், தேவையான மருத்துவ உதவியைப் பெற்ற பின்னர், கைதிகள் போலந்து மற்றும் லிதுவேனியாவிற்கு கொண்டு செல்லப்படுவார்கள் என உக்ரேன் தெரிவித்துள்ளது.