அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தையில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது முதல் பொதுப் பங்கு வெளியீட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
நாஸ்டாக் பங்குச்சந்தையின் முதல் நாள் வர்த்தக முடிவில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 2.1 டிரில்லியன் என்ற மாபெறும் இலக்கை எட்டியுள்ளது.
இந்த முதல் நாள் வர்த்தகம், எவ்வித அதீத பதற்றமும் இன்றி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு ஒரு மிக வெற்றிகரமான தொடக்கமாக அமைந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அதே வேளையில், எலான் மஸ்க்கின் அசுர சொத்து வளர்ச்சியைக் கண்டித்து அமெரிக்காவின் முன்னணி ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
அமெரிக்காவில் நிலவும் மிக மோசமான பொருளாதார சமத்துவமின்மைக்கும், சீர்குலைந்த ஒரு கட்டமைப்புக்கும் மஸ்க்கின் சொத்தே சாட்சி என்று அவர்கள் சாடியுள்ளனர். இது தொடர்பான விமர்சனங்களை ஆராயும் போது செனட்டர் எலிசபெத் வாரன் “ஒரு சாதாரண அமெரிக்கக் குடும்பம் எலான் மஸ்க்கின் தற்போதைய சொத்து நிலையை எட்ட வேண்டுமென்றால், அவர்கள் 11 மில்லியன் (1.1 கோடி) ஆண்டுகள் உழைக்க வேண்டும்“ என சுட்டிகாட்டியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி தங்களின் எதிர்காலத்தை என்னவாக மாற்றுமோ என்ற கவலை அமெரிக்க மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அண்மையில் வெளியான ‘குயினிபியாக்’ கருத்துக்கணிப்பின்படி, 10-ல் 8 அமெரிக்கர்கள் (80%) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர். இதற்கு நேர்மாறாக, மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே இது குறித்து ஆர்வம் காட்டியுள்ளனர்.
நாஸ்டாக் மற்றும் எஸ் அண்ட் பி 500 போன்ற முதன்மை பங்குச்சந்தை குறியீடுகள் , ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையிலேயே அவற்றின் எடையை நிர்ணயிக்கின்றன.
இதன் விளைவாக, அமெரிக்க மக்கள் AI தொழில்நுட்பத்தை விரும்புகிறார்களோ இல்லையோ, தங்களின் நிதி எதிர்காலத்தை இந்த ஆபத்தான மற்றும் நிச்சயமற்ற தொழில்நுட்பத்தின் பாதையோடு இணைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதாக அதிகாரிகள் சுட்டிகாட்டியுள்ளனர்.




