பாகிஸ்தானில் நவம்பர் 13 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 27வது அரசியலமைப்புத் திருத்தம் ஜனநாயகம் என்ற ஒரு புறத்தோற்றத்துக்கு பின்னால் இருந்து கொண்டு இராணுவத் தலைமைத்துவமே இரகசியமாகச் செல்வாக்குச் செலுத்தி ‘ ஆட்சி ‘ நடத்திக்கொண்டிருக்கிறது என்ற நீண்டநாள் பகிரங்க இரகசியத்தை விதிமுறைப்படுத்தியிருக்கிறது. இராணுவத் தளபதி அசீம் முனீர் படிப்படியாக தனது அதிகாரத்தை வலுப்படுத்திவந்திருக்கிறார்.பிரதமர் ஷெபாஸ் ஷரீபின் கூட்டணி அரசாங்கம் அவரின் ஆசீர்வாதங்களுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தியாவுடனான குறுகிய ஒரு மோதலுக்கு பிறகு கடந்த மே மாதத்தில் ஜெனரல் முனீரை அரசாங்கம் பீல்ட் மார்ஷலாக தரமுயர்த்தியது. 1958 ஆம் ஆண்டில் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஜெனரல் அயூப் கானுக்கு பிறகு இரண்டாவதாக ஐந்து நட்சத்திர ஜெனரலாக முனீர் வந்திருக்கிறார்.
அரசியலமைப்புத் திருத்தம் இராணுவ கட்டளைப் பீடத்தையும் நீதித்துறையையும் மறுசீரமைத்திருக்கிறது. அது பாகிஸ்தான் அரசியலமைப்பின் 243 வது சரத்தை திருத்தி எழுதி பாதுகாப்பு படைகளின் பிரதானி (Chief of Defence Forces ) என்ற பதவியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அந்தப் பதவி இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை மீது அதிகாரத்தைக் கொண்டிருக்கும் இராணுவத் தளபதியே பாதுகாப்பு படைகளின் பிரதானியாகவும் இருப்பார்.
அணுவாயுதங்கள் மற்றும் கேந்திர முக்கியத்துவ சொத்துக்களை மேற்பார்வை செய்வதற்கு தேசிய மூலோபாய கட்டளையகத்தின் தளபதி (Commander of National Strategic Command) என்ற ஒரு பதவியையும் அரசியலமைப்பு திருத்தம் உருவாக்குகிறது. அந்த தளபதி இராணுவத் தளபதியின் சிபாரிசின் பேரில் பிரதமரினால் நியமிக்கப்படுவார்.
ஐந்து நட்சத்திர தரத்துக்கு உயர்த்தப்படும் எந்தவொரு அதிகாரிக்கும் (தற்போது ஜெனரல் முனீர்) எதிராக குற்றவியல் வழக்குகளைத் தொடுக்க முடியாதவாறு வாழ்நாள் பூராவும் தண்டனை விலக்கை (Immunity) அரசியலமைப்புத் திருத்தம் வழங்குவது மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். இந்த தண்டனை விலக்கு ஜனாதிபதிக்கும் உரியதாகும். ஐந்து நட்சத்திர அதிகாரிகள் வாழ்நாள் பூராவும் சீருடையிலேயே இருப்பர். அவர்களைை அரசியலமைப்பின் 47 வது சரத்தின் கீழ் உள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் பதவிநீக்கச் செயன்முறை ( Impeachment Process ) ஒன்றின் மூலம் மாத்திரமே அகற்ற முடியும்.
மெய்யாகவே ஜெனரல் முனீர் தான் ஆட்சி நிறுவனக் கட்டமைப்பில் புதிய மத்திய மயப்படுத்தப்பட்ட அதிகார மையமாக விளங்கப்போகிறார்.
அரசியலமைப்பை வியாக்கியானம் செய்யும் அதிகாரத்தை உச்சநீதிமன்றத்திடம் (Supreme Court) இருந்து அரசியலமைப்புத் திருத்தம் பறிக்கிறது. பதிலாக புதிய ஒரு அரசியலமைப்பு நீதிமன்றம் (Constitutional Court) உருவாக்கப்படுகிறது. அதற்கான நீதிபதிகள் அரசாங்கத்தினால் நியமிக்கப்படுவர். இந்த புதிய ஏற்பாட்டை ஆட்சேபித்து சிரேஷ்ட நீதிபதிகள் பலர் பதவிகளை இராஜினாமாச் செய்து விட்டனர்.
பாகிஸ்தானில் ஜனநாயகம் ஒருபோதுமே உறுதியான தாக இருந்ததில்லை. இருந்தாலும், நெருக்கடியான தருணங்களில் சிவில் சமூகமும் அரசியல் வர்க்கத்தின் பிரிவுகளும் பலம்பொருந்திய ஜெனரல்களை எதிர்த்து நின்று மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு ஜனநாயக இடப்பரப்பை மீட்டெடுத்தன.
ஆனால், இன்று ஜெனரல் முனீரை எதிர்த்துச் சவால் விடுக்கும் ஒரேயொரு பிரதான அரசியல்வாதியாக இம்ரான் கான் மாத்திரமே விளங்குகிறார். ஆனால் அவர் இரண்டு வருடங்களுக்கும் அதிகமான காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
பலவீனமான ஒரு அரசாங்கத்தையும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிர்க்கட்சி தலையைத்துவத்தையும் கொண்ட ஒரு நாட்டில் அரசியலமைப்பின் முழுமையான பாதூகாப்பு வசதியுடன் ஜெனரல் முனீர் தனது அதிகாரத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், பாகிஸ்தானில் இராணுவப் பலவான்களின் எழுச்சிக் கதை இறுதியில் அவர்களின் வீழ்ச்சியுடன் முடிவடைவதே வழமையாகும்.
பாகிஸ்தான் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் கிளச்ச்சிகளுக்கு எதிராகப் சண்டையிட வேண்டியிருக்கும் ஒரு நேரத்தில் ஜெனரல் முனீர் அதிகாரத்தை அபகரித்திருக்கிறார். பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் தாழ்ந்த ஒரு மட்டத்தில் இருக்கின்றன. இம்ரான் கானின் பி.ரி.ஐ. கட்சி ‘ கலப்பு ‘ சிவிலியன் – இராணுவ ஆட்சிக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடி சவால் விடுத்துக்கொண்டிருக்கிறது. பொருளாதாரம் தொடர்ந்தும் இடர்பாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்த சவால்களுக்கு ஜெனரல் முனீரின் எதிர்வினை பலவீனமான அரசியல்வாதிகளைப் பயன்படுத்தி மறைமுகமான சதிப்புரட்சியைச் செயவதாகவே இருந்திருக்கிறது. அது விரைவாகவே அவருக்கு எதிர்மாறான பின்வளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.



