பிரான்சில் மாயமான சிறுமி சடலமாக மீட்பு: நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ள சம்பவம்

பிரான்சில் காணாமல்போன சிறுமி ஒருத்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம், நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது.

மாயமான சிறுமி சடலமாக மீட்பு

கடந்த மாதம் 29ஆம் திகதி, தென்மேற்கு பிரான்சிலுள்ள Fleurance என்னும் நகரில் வாழ்ந்துவந்த லிஹானா (Lyhanna, 11) என்னும் சிறுமி காணாமல் போனாள்.

பிரான்சில் மாயமான சிறுமி சடலமாக மீட்பு: நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ள சம்பவம் | Thousands Gather To March For Murdered French Girl

அவள் கடைசியாக தன் பள்ளித் தோழி ஒருத்தியின் தந்தையின் காரில் ஏறிச் சென்ற நிலையில், ஒரு வாரத்துக்குப் பிறகு, கைவிடப்பட்ட உணவு தானிய சேமிப்பகம் ஒன்றில் அவளது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

லிஹானாவை காரில் ஏற்றிச் சென்ற ஜெரோம் (Jerome B. 41) என்னும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடயம் என்னவென்றால், ஜெரோம் மீது ஏற்கனவே சிறுமிகள் பலரை சீரழித்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இருந்தும், நீதித்துறை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்பு ஜெரோம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோதே அவர் கைது செய்யப்பட்டிருந்தால், லிஹானாவின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ள விடயம்

லிஹானாவின் மரணம் நாட்டையே கொந்தளிக்கச் செய்துள்ள நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், நாட்டின் நீதித்துறையிலுள்ள ஏற்றுக்கொள்ள இயலாத ஓட்டைகளை கடுமையாக சாடியுள்ளார்.

பிரான்சில் மாயமான சிறுமி சடலமாக மீட்பு: நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ள சம்பவம் | Thousands Gather To March For Murdered French Girl

அதேபோல, பிரான்ஸ் நீதித்துறை அமைச்சரான ஜெரால்ட் டார்மனின், வழக்கத்தை மீறி, லிஹானாவின் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரியுள்ளதுடன், பிரான்ஸ் நீதித்துறை ஜெரோம் விடயத்தில் பல விடயங்களை கோட்டை விட்டது குறித்து தான் கொந்தளித்துப் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், லிஹானா கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நேற்று, Fleurance நகரில் வாழும் சுமார் 6,000 பேர், கொதிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், லிஹானாவின் பெற்றோருடன் இணைந்து அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.