பிரித்தானியாவில் சிறிலங்கா பெண் கொலை : கணவனுக்கு ஆயுள் தண்டனை!

பிரித்தானியாவின் கொர்டிஃப் நகரில், பிரிந்து வாழ்ந்த தனது மனைவியைக் கார் நிறுத்துமிடத்தில் வைத்து கொடூரமாகக் குத்திக் கொலை செய்த 37 வயதுடைய கணவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வியடம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொலை செய்யப்பட்ட 32 வயதுடைய பெண்ணும்  குற்றவாளியான 37 வயதுடைய நபரும் இலங்கையில் 2017ஆம் ஆண்டு  திருமணம் செய்துகொண்டனர்.

சிறந்த கல்வித்தகுதி கொண்ட இவர்கள், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக 2022ஆம் ஆண்டு பிரித்தானியாவின் கார்டிஃப் நகருக்கு குடிபெயர்ந்தனர்.

எனினும், அங்கு குறித்த பெண்  ஒரு முதியோர் இல்லத்தில் பராமரிப்பாளராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் இவர்களுடைய  திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புணர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், அந்த பெண் சக ஊழியர் ஒருவருடன் பழகத் தொடங்கினார். இந்த விடயத்தை அறிந்துக்கொண்ட குறித்த பெண்ணின் கணவர்  ஆத்திரமடைந்து  கடந்த 2025 ஆகஸ்ட் 21 ஆம் திகதி கொர்டிஃப், ரிவர்சைடு பகுதியில் உள்ள சவுத் மோர்கன் பிளேஸில் (South Morgan Place) வைத்து குறித்த பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

கொலையைச் செய்துவிட்டு தனது காரில் தப்பிச் சென்ற சந்தேகநபர், சிறிது நேரத்தில் ட்ரெமோர்ஃபா (Tremorfa) பகுதியில் ஒரு லொறியின் பின் சக்கரத்தில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

பின்னர், அவர் உயிருடன் மீட்கப்பட்டு அந் நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் அவரது காரில் இருந்து இரத்தக் கறை படிந்த கையுறைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

ஆரம்பத்தில் இந்தக் கொலைக் குற்றச்சாட்டை மறுத்த சந்தேகநபர், பின்னர் ஜனவரி மாதம் நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் (Newport Crown Court) நடைபெற்ற விசாரணையின் போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

குறித்த பெண்  சக ஊழியர் ஒருவருடன் பழகத் தொடங்கியதால் ஏற்பட்ட  கோபமே இந்த கொலை சம்பவத்திற்கு காரணம் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொலையாளியான சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் அவர் குறைந்தபட்சம் 23 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவித்த பின்னரே, அவரை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என அந்நாட்டு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.