பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற ஒருவருக்கு சீனா மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
பிரெஞ்சுக் குடிமகனுக்கு மரண தண்டனை
பிரெஞ்சுக் குடியுரிமை கொண்டவரான சான் (Chan Thao Phoumy, 62) என்பவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு சீனா மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
2010ஆம் ஆண்டு, போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட சானுக்கு மரண தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டது.
சானுடைய தண்டனையைக் குறைக்கவேண்டும் என கோரி பிரான்ஸ் கருணை மனு தாக்கல் செய்த நிலையிலும், அதை ஏற்றுக்கொள்ளாமல் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், பாரீஸிலுள்ள சீன தூதரம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், எந்த நாட்டுக் குடிமக்களானாலும், குற்றவாளிகள் என்றால் அவர்களை சீனா ஒரேமாதிரியாகவே நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா மரண தண்டனை விதிப்பதில் உலகில் முன்னிலை வகிப்பதாக தெரிவித்துள்ள மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல், அந்நாடு ஆண்டொன்றிற்கு ஆயிரக்கணக்கானோருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதாக நம்பப்படுவதாக தெரிவித்துள்ளது.





