பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட வெனிசுவேலாவிற்கு இந்தியா மருத்துவ உதவி

பூமியதிர்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வெனிசுவேலாவுக்கு, ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ திட்டத்தின் கீழ்  அனுபவம் வாய்ந்த வைத்தியர்கள் அடங்கிய குழுவை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

வெனிசுவேலாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது,

அனுபவம் வாய்ந்த இந்திய வைத்தியர்கள் அடங்கிய குழு, கராகாஸில் உள்ள இன்டர்நேஷனல் லா ரின்கோனாடா ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் வைத்திய முகாம் அமைத்துள்ளது. இந்த வைத்தியசாலை தற்போது 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அனைத்து வைத்திய சேவைகளும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுவேலாவில் கடந்த வாரம் 7.2 மற்றும் 7.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த இரட்டை பூமியதிர்ச்சி ஏற்பட்டன. கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய பூமியதிர்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்றைய  நிலவரப்படி 1,700 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளனர்.

பூமியதிர்ச்சியால் உருக்குலைந்த வெனிசுவேலாவிற்கு பல்வேறு நாடுகளும் உதவி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவும் நிவாரண உதவிக்ளை செய்து வருகிறது. இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளதாவது,

பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய இராணுவத்தின் கள வைத்தியசாலை வைத்திய சேவைகளை வழங்கி வருகிறது. இந்திய இராணுவ வைத்தியர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். வெனிசுவேலா பிரதி சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் தலைநகர் மாவட்ட அரசின் தலைவர் ஆகியோர் இந்திய இராணுவ கள வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர் என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில்,

இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கள வைத்தியசாலை வெனிசுவேலாவை சென்றடைந்துள்ளதாகவும், அந்நாட்டின் நிலநடுக்க நிவாரணப் பணிகளுக்கு அவை பெரிதும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மனிதாபிமான உதவித் திட்டமான ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ மூலம், இந்திய விமானப்படையின் இரண்டு சி-17 குளோப்மாஸ்டர் விமானங்கள் 66 தொன் நிவாரணப் பொருட்களை வெனிசுவேலாவுக்கு கொண்டு சென்றன. இதில், இந்திய இராணுவ கள வைத்தியசாலை, 35 தொன்களுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை அடங்கும்.

டெல்லியில் இருந்து கராகாஸ் வரை 14 ஆயிரம் கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை சுமார் 23 மணி நேரத்தில் இந்த விமானங்கள் கடந்து சென்றதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் வெனிசுவேலா அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா உறுதுணையாக நிற்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.