சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையிலும், உள்நாட்டு மக்கள் மீதான பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்காக பெற்றோல் விலையைக் குறைக்க பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (03) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், பெற்றோலியப் பொருட்கள் மீதான வரியை 80 ரூபாவினால் குறைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 378 ரூபாவாகக் குறைக்கப்படவுள்ளது.
பாகிஸ்தானில் திருத்தப்பட்ட விலை பட்டியல் சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதுடன், குறைந்தது ஒரு மாதகாலத்திற்காவது நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாகிஸ்தான் பெற்றோல் விலையை சுமார் 43 சதவீதமும், சுப்பர் டீசல் விலையை 55 சதவீதமாக அதிகரித்ததைத் தொடர்ந்து ஒரு லீற்றர் பெற்றோல் விலை ரூ.458 ஆகவும், ஒரு லீற்றர் டீசல் விலை ரூ.520.35 ஆகவும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் பிரதமர் தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலை அதிகரித்தமையால் ஏற்படக்கூடிய சவால்களை குறைப்பதற்காக அரசாங்கம் இதுவரை 129 பில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும், எரிபொருள் நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் வகையில் , மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள் ஆறு மாதங்களுக்குத் தங்கள் சம்பளத்தை அர்ப்பணிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் ஊடகசந்திப்பின் போது மேலும் தெரிவித்துள்ளார்.





