மன்னிப்புக் கேட்டார் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி

பிரான்ஸ் முதல் பெண்மணி, தான் பயன்படுத்திய மோசமான வார்த்தையால் சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது அதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

சர்ச்சையில் சிக்குவது என்பது பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவியும், பிரான்சின் முதல் பெண்மணியுமான பிரிஜிட் மேக்ரானுக்கு (72) புதிதில்லை.

சமீபத்தில், தான் பயன்படுத்திய மோசமான வார்த்தைக்காக சர்ச்சையில் சிக்கினார் இமானுவல் மேக்ரானின் மனைவியான பிரிஜிட்.

2021ஆம் ஆண்டு, பிரெஞ்சு நடிகரும் நகைச்சுவையாளருமான Ary Abittan (51)என்பவர் தன்னை வன்புணர்ந்ததாக அவர் மீது இளம்பெண்ணொருவர் குற்றம் சாட்டியிருந்தார்.

மூன்று ஆண்டுகள் வழக்கு விசாரணைக்குப் பிறகு அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்தப் பெண் மேல்முறையீடு செய்தும் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் மேடை நிகழ்ச்சி ஒன்று நடத்துவதற்காக பாரீஸிலுள்ள தியேட்டர் ஒன்றிற்கு வந்திருந்த Abittanஐ பிரான்ஸ் முதல் பெண்மணியாகிய பிரிஜிட் சந்தித்தார்.

மன்னிப்புக் கேட்டார் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி | French 1St Lady Apologises Remark On Feminists

Abittan நிகழ்ச்சிகள் நடத்தும்போது, வன்புணர்வுக்கெதிராக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களான பெண்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்புவதுண்டு.

இந்நிலையில், அன்றும் Abittan பங்கேற்கும் நிகழ்ச்சிக்கும் அந்த சமூக ஆர்வலர்கள் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தன்னை தனிப்பட்ட முறையில் சந்தித்த பிரிஜிட்டிடம், அந்த பெண்கள் தன் நிகழ்ச்சியின்போது தொல்லை கொடுக்கலாம் என தான் பயப்படுவதாகத் தெரிவித்துள்ளார் Abittan.

அதற்கு பதிலளித்த பிரிஜிட், மோசமான வார்த்தை ஒன்றைப் பயன்படுத்தி, அந்த மோசமான பெண்கள் இங்கு வந்திருப்பார்களானால், நாம் அவர்களை அப்புறப்படுத்திவிடுவோம் என்று கூறியுள்ளார்.

அவர் Abittanஇடம் பேசும் இந்த காட்சி ஊடகம் ஒன்றின் சமூக ஊடகப்பக்கம் ஒன்றில் வெளியாக, சர்ச்சை உருவானது.

கடும் சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, தான் பயன்படுத்திய வார்த்தைக்காக தற்போது மன்னிப்புக் கேட்டுள்ளார் பிரிஜிட்.

ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நிலையில், ‘பாதிக்கப்பட்ட பெண்களை நான் காயப்படுத்தியிருப்பேனானால், அதற்காக நான் வருந்துகிறேன்’ என்று கூறியுள்ளார் பிரிஜிட்.