மாலைதீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இரு மீன்பிடிப் படகுகள் கைது

மாலைதீவு கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த இரண்டு மீன்பிடிப் படகுகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன.

மாலைதீவின் விசேட பொருளாதார மண்டலத்திற்குச் சொந்தமான கடல் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 2 மீன்பிடிப் படகுகள், அந்நாட்டு தேசிய பாதுகாப்புப் படையினரால் புதன்கிழமை (17) காலை 8.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளன. மாலைத்தீவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கேலா தீவுக்கு அருகில் வைத்து  இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த விசேட நடவடிக்கை குறித்து அந்நாட்டு ஊடகங்கள் வியாழக்கிழமை (18) தகவல்களை வெளியிட்டுள்ளன. வெளிநாட்டுப் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த இவ்விரண்டு மீன்பிடிப் படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய கேலா தீவிலிருந்து சுமார் 51 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த படகுகளை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த படகுகள் தற்போது மாலத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மீன்பிடிப் படகிலிருந்து மீட்கப்பட்ட 24 பொதிகளிலிருந்து 58 கிலோ 600 கிராம் ஹெரோயின் மற்றும் 297 கிலோ 300 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன், 6 இலங்கையர்கள் மற்றும் “அவிஷ்க புதா” என்ற மீன்பிடிப் படகு கைது செய்யப்பட்டிருந்தது.

இலங்கை கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே அந்தத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.