மின்சார சபையின் மறுசீரமைப்பு: 64 கோரிக்கைகளில் 62 நிறைவேற்றம்

இலங்கையில் 1969 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலிருந்த மின்சார உற்பத்தி மற்றும் விநியோகக் கட்டமைப்பு, புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய தற்போது ஆறு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை பணிக்குழுவின் புபுது நிரோஷண தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்றைய தினம் கொழும்பிலுள்ள மின்சார சபை தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த தேசிய மின் கட்டமைப்பின் தலைவர் கலாநிதி பிரதீப் பெரேரா, நாட்டின் மின் தேவையையும் விநியோகத்தையும் தமது நிறுவனம் உடனுக்குடன் கண்காணித்து வருவதாகவும், தற்போது போதிய எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் மின் விநியோகத்திற்கு எவ்வித தடையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

தொழிற்சங்க நடவடிக்கைகள் மின்சார விநியோகத்தைப் பாதிக்காத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதியளித்தார்.

இதேவேளை, மின் உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சஜித் ஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில், தமது ஊழியர்கள் எவ்வித சீர்குலைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனவும், பொதுமக்கள் அச்சமின்றி தமது அன்றாடப் பணிகளை முன்னெடுக்கலாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

விநியோக நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் வோல்டர் ஜயரத்ன பேசுகையில், மின்சார சபை இருந்த காலத்தைப் போலவே தற்போதும் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், ஊழியர்களின் தொழிற்சங்க உரிமைகளை மதிக்கும் அதேவேளை நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட பட்டயக் கணக்காளர் குமாரதுங்க, தொழிற்சங்கங்கள் முன்வைத்த 64 கோரிக்கைகளில் 62 கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். எஞ்சிய இரண்டு கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வு காண இணக்கம் காணப்பட்டுள்ளது. ஊழியர்கள் கோரும் 40 சதவீத சம்பள உயர்வு மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு ஆண்டுக்கு 22 பில்லியன் ரூபா மேலதிக செலவு ஏற்படும் எனவும், அவ்வாறு வழங்கினால் மின்சாரக் கட்டணத்தை 100 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நிறுவனத்தின் ஓய்வூதிய நிதி கடந்த காலங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டதால் தற்போது நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

மின்சாரச் சேவை தற்போது அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அனைத்து ஊழியர்களும் பணிக்குத் திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு இடத்தில் வேண்டுமென்றே மின்சாரத்தைத் துண்டிக்கும் அல்லது பழுதுகளைச் சரி செய்ய மறுக்கும் சீர்குலைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றால், சம்பந்தப்பட்ட ஊழியர்களின் சேவை உடனடியாக அத்துமீறப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நிறுவன மறுசீரமைப்பின் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு அலகு மின்சாரத்தின் விலையை 8 அமெரிக்க டொலர் சதங்களாகக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும். இதற்காக சூரிய மின்சக்தியைச் சேமிக்கும் பெட்டரி கட்டமைப்புகளை அறிமுகப்படுத்தவும், போட்டித்தன்மையுடன் மின் உற்பத்தியை அதிகரித்து நுகர்வோருக்குக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன் பேசுவதற்கு முன்னர், பணிப்புறக்கணிப்புகளைக் கைவிட்டுச் சேவையில் ஈடுபட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.