முதன்முறையாக ஐ.நா.வின் பாலியல் வன்முறைக்கான கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது இஸ்ரேல்!

ஆயுத மோதல்களின் போது பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் தரப்புகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் வெளியிடும் கறுப்புப் பட்டியலில் முதன்முறையாக இஸ்ரேல் சேர்க்கப்பட்டுள்ளது.

ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் சமர்ப்பித்துள்ள அண்மைக்கால அறிக்கையின் அடிப்படையில் இந்த உத்தியோகபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காசா மற்றும் மேற்குக்கரை ஆகிய பகுதிகளில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய தரப்பால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் மோதல் சார்ந்த பாலியல் வன்முறைகள் குறித்து ஐ.நா விசேட விசாரணை நடத்தியதை தொடர்ந்து இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2023 முதல் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட 31 பாலியல் வன்முறைச் சம்பவங்களை ஐ.நா அதிகாரப்பூர்வமாக உறுதிப்பட்டள்ளதோடு இந்த உறுதியான வழக்குகளில் 13 சம்பவங்கள் கடந்த 2025 ஆம் ஆண்டிலும், மீதமுள்ள 18 சம்பவங்கள் அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளிலும் பதிவாகியுள்ளன.

ஐ.நா அறிக்கையின்படி,

பாதிக்கப்பட்டவர்கள் கற்பழிப்பு , பாலியல் சித்திரவதை, கட்டாய நிர்வாணப்படுத்துதல் மற்றும் பாலியல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எனினும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, உண்மையான பாதிப்புகள் இதைவிடப் பலமடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.

குற்த்த இந்த  அறிக்கையை தொடர்ந்து

ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அதிரடி முடிவை இஸ்ரேல் முற்றாக நிராகரித்துள்ளது.

“ஐ.நா.வின் இந்த முடிவு முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. உண்மைக்குப்புறம்பான இந்த அறிக்கையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.”

— இஸ்ரேலிய அரச அதிகாரிகள்

இந்தக் கறுப்புப் பட்டியல் வெளியீட்டைத் தொடர்ந்து, ஐ.நா பொதுச்செயலாளரின் அலுவலகத்துடனான அனைத்துவிதமான ஒத்துழைப்புகளையும் தற்காலிகமாகப் இடைநிறுத்துவதாக  இஸ்ரேல் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மோதல்களின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகளை சர்வதேச அரங்கில் அடையாளப்படுத்துவதற்காகவே ஐ.நா இந்த ஆண்டு அறிக்கையையும் கறுப்புப் பட்டியலையும் பராமரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.