வங்காள விரிகுடாவில் வலுவடைந்து வரும் மொன்தா புயல், அதன் கிழக்கு கடற்கரையில் பலத்த காற்று மற்றும் மழையை ஏற்படுத்தவுள்ள நிலையில், திங்கட்கிழமை (27) இந்தியா 50,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு ஆந்திரா மற்றும் கிழக்கு மாநிலமான ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் அவசரகால ஊழியர்களுக்கான விடுமுறைகளை அதிகாரிகள் இரத்து செய்து, பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டனர்.
இந்த புயல் செவ்வாய்க்கிழமைக்குள் கடும் புயலாக மாறி, பின்னர் ஆந்திரப் பிரதேசத்தின் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
“காக்கிநாடா மாவட்டத்தில் கடற்கரைக்கு அருகில் உள்ள மக்களை வெளியேற்றும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது ” என ஆந்திரப் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
அதன்படி, சுமார் 50,000 பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அறிக்கை காட்டுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்து குடும்பங்களை மாற்ற அனர்த்த முகாமைத்துவ குழுக்கள் விரைந்துள்ளன. அங்கு 3.9 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
அண்டை மாநிலமான ஒடிசாவில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டனர்.
ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் இந்தியாவின் கிழக்கு கடற்கரையை அடிக்கடி புயல்கள் தாக்குகின்றன.
1999 அக்டோபரில் ஒடிசாவைத் தாக்கிய புயலில் சிக்கி 10,000 பேர் உயிரிழந்தனர். இந்தியாவை பாதித்த மிகவும் மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது.
சில மாவட்டங்களில் கடும் மழை வீழ்ச்சி பதிவாகும் என வெளியான வானிலை முன்னறிவிப்பைத் தொடர்ந்து, தெற்கு மாநிலமான தமிழ்நாட்டின் அதிகாரிகள் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு மிச்சாங் புயலால் ஏற்பட்டதைப் போல கடும் மழை பொழிந்து சென்னை வெள்ளத்தில் மூழ்க வாய்ப்புள்ளது.
இமயமலை நாடான நேபாளத்தில், செவ்வாய் முதல் வெள்ளி வரை மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர், மேலும் மலையேற்றம் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இம் மாதம் நேபாளம் முழுவதும் பெய்த கடும்மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி 53 பேர் உயிரிழந்துள்ளனர்.





