மொரோக்கோ – ஃபெஸ் நகரில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்து 22 பேர் உயிரிழப்பு

மொரோக்கோ நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்றான ஃபெஸில் புதன்கிழமை (10) இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, 16 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு கட்டிடங்களில் ஒரு கட்டிடம் வெறுமையாக இருந்ததாகவும், மற்றொரு கட்டிடத்தில் இஸ்லாமிய மரபில் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கொண்டாடும் அகீகா (Aqiqah) சடங்கு நடைப்பெற்றதாக ஃபெஸ் நகரை சேர்ந்த சட்டதரணி தெரிவித்துள்ளார்.

இடிந்து விழும்போது அகீகா (Aqiqah) சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்தில் எட்டு குடும்பங்கள் வசித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டதரணி மேலும் தெரிவித்துள்ளார்.

ஃபெஸ் நகரின் மேற்கு பகுதியில் அதிக சனத்தொகை கொண்ட அல்-முஸ்தக்பால் பகுதியில் உள்ள கட்டிடங்கள் சிறிது காலமாகவே விரிசல் ஏற்படுவதற்கான அறிகுறிகளைக் கொண்டிருந்ததாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்ததாக SNRT செய்தி சேவை தெரிவித்துள்ளது.இந்த நான்கு மாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்ததற்கான காரணத்தைக் கண்டறிய நீதித்துறை விசாரணையைத் தவிர்ந்த, தொழில்நுட்ப மற்றும் நிர்வாக விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நகரத்தில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்காக அரசாங்கத் திட்டத்தின்  கீழ் 2006 ஆம் ஆண்டில் இந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டன.

எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த முன்னாள் தலைநகராகவும், நாட்டின் அதிக சனத்தொகை கொண்ட மூன்றாவது நகரமாகவும் இருந்த ஃபெஸ், மோசமடைந்து வரும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் பொது சேவைகள் தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களின் அலையில் சிக்கிய நகரங்களில் ஒன்றாகும்.

மொரோக்கோ நாடு முழுவதும் சுமார் 38,800 கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக ஜனவரி மாதம் வீடமைப்பு அலுவல்கள் அமைச்சர் அடிப் பென் இப்ராஹிம் தெரிவித்திருந்தார்.

2010 ஆம் ஆண்டில் 41 பேர் கொல்லப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க வடக்கு நகரமான மெக்னஸில் இஸ்லாமிய பள்ளிவாசல்களில் காணப்படும் மினாரெட் எனப்படும் உயரமான கோபுரம்  இடிந்து விழுந்ததற்குப் பின்னர் புதன்கிழமை மொராரோக்கோவில் ஏற்பட்ட மிகவும் மோசமான சம்பவம் இதுவாகும்.