மொஸ்கோவில் ரஷ்ய இராணுவ உயர் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு

ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில், இராணுவத்தின் உயர் பதவியிலுள்ள அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ரஷ்ய இராணுவ தளபதியின் பிரதான புலனாய்வுத்துறையின் (GRU) உயர் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்செயேவ் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் மொஸ்கோ நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள வோலோகோலாம்ஸ்க் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டடமொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக வைத்திசாலைக் கொண்டு செல்லப்பட்ட அலெக்செயேவின் உடல்நிலை தொடர்பான தகவல்கள் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த ரஷ்ய விசாரணைக் குழுவின் பேச்சாளர் ஸ்வெத்லானா பெட்ரென்கோ, “பாதிக்கப்பட்ட அதிகாரி நகரின் ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கொலை முயற்சி என்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

விளாடிமிர் அலெக்செயேவ், உக்ரைன் போரில் ரஷ்ய இராணுவத்தில் முக்கிய பங்காற்றிய உயர் அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். 2022 ஆம் ஆண்டு மாரியுபோல் நகரம் முற்றுகையிடப்பட்டபோது உக்ரைனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் அவர் பங்கேற்றிருந்தார். அதேபோன்று, 2023 ஜூன் மாதத்தில் வோக்னர் கூலிப்படை தலைவர் யெவ்கெனீ பிரிகோஷின் தலைமையிலான கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவர நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் அலெக்செயேவ் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

மேலும், 2018 ஆம் ஆண்டு பிரிட்டனின் சாலிஸ்பரி நகரில் நடைபெற்ற நரம்பு விஷ தாக்குதலுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, அலெக்செயேவ் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார மற்றும் பயணத் தடைகள் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதலுக்குப் பின்னணியில் யார் உள்ளனர் என்பது இதுவரை தெரியவரவில்லை. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக மொஸ்கோவில் ரஷ்ய இராணுவ உயர் அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு முன், 2024 ஆம் ஆண்டு ஜெனரல் இகோர் கிறிலோவ் மொஸ்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்திருந்தார். அந்த தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் புலனாய்வு அமைப்பு இருந்ததாக அந்நாடு தெரிவித்திருந்தது.

அதேபோன்று, 2025 டிசம்பரில் மற்றொரு உயர் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் ஃபானில் சர்வரோவ், மாஸ்கோவில் அவரது காரின் கீழ் வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்திருந்தார்.

உக்ரைன் – ரஷ்ய போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், மொஸ்கோவில் இடம்பெறும் இவ்வகை தாக்குதல்கள் ரஷ்யாவின் உள்நாட்டு பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளன.