விமானங்கள் இரத்து செய்யப்பட்டமையினால் பயணச்சீட்டு கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் திருப்பி கொடுத்து வருகிறது.
விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் பணியாளர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. அட்டவணையிடப்பட்ட விமானங்களை இயக்க விமானிகள் மற்றும் பிற பணியாளர்கள் போதுமான அளவில் இல்லாமையினால் அந்த விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. கடந்த 5 நாட்களாக இது தொடர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 2,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு விமானங்கள் மட்டுமின்றி, பன்னாட்டு விமானங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் பயணத்தடை ஏற்பட்டு அவதிப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பில் இந்திய பாராளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில் இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான கட்டணத்தை பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்குள் இண்டிகோ நிறுவனம் திரும்ப செலுத்த வேண்டும் என இந்திய மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், விமானங்கள் இரத்தால் பயணச்சீட்டு கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் கொடுத்து வருகிறது. இதுவரை இந்திய மதிப்பில் 610 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீட்பு செயல்முறையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், முழுமையான செயல்பாட்டு இயல்புநிலையை விரைவில் மீட்டெடுப்பதில் உறுதியாக உள்ளதாகவும் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.





