இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் ஆகியோரின் இன்று (23) நடைபெறவிருந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருமணம், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சாங்க்லியில் உள்ள மந்தனாவின் பண்ணை வீட்டில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்த நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு காலை உணவின்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவர் சாங்க்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதையடுத்து குடும்பத்தினரும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் குடும்ப தகவல்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
“ஸ்மிருதி மந்தனா தன் தந்தை மீது அதிக பாசம் கொண்டவர். அவர் முழுமையாக குணமடையும் வரை திருமணத்தை காலவரையின்றி ஒத்திவைக்க அவர் முடிவு செய்தார்” என்று ஸ்மிருதியின் முகாமையாளர் துஹின் மிஸ்ரா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
திருமண நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக விழாவை ரத்து செய்துவிட்டதாகவும், திருமண அலங்காரங்களை அகற்றும் பணிகள் மண்டபத்தில் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





