மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், பிரான்ஸ் தனது விமானம் தாங்கிய போர்க்கப்பல் உள்ளிட்ட 8 போர்க்கப்பல்களை ஏதென்ஸ், மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல் பகுதிகளுக்கு பாதுகாப்பிற்காக அனுப்பியுள்ளது.
கடந்த வாரம் சைப்ரஸ் (Cyprus) மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து அங்கு விஜயம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், “சைப்ரஸ் மீதான தாக்குதல் என்பது ஒட்டுமொத்த ஐரோப்பாவின் மீதான தாக்குதல் “என எச்சரித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, சர்வதேச வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் பாதுகாப்பாக திறக்கும் நோக்கில், அங்குள்ள சரக்குக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டாங்கர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் ஒரு விசேட ‘பாதுகாப்புப் படை’ (Escort Mission) ஒன்றை உருவாக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பிய மற்றும் ஐரோப்பிய அல்லாத நட்பு நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள இந்த நடவடிக்கை, முற்றிலும் தற்காப்பு ரீதியானது என்று மெக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
போரின் மிகத் தீவிரமான கட்டம் முடிவுக்கு வந்தவுடன், சர்வதேச வர்த்தகத்தை சீராக்கவும், எண்ணெய் விநியோகத் தடைகளை நீக்கவும் இந்த போர்க்கப்பல்கள் பயன்படுத்தப்படும்.
பிரான்சின் இந்த அதிரடி நகர்வு, ஈரானுடனான மோதல் உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தைப் பாதிக்காமல் இருக்க எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான இராஜதந்திர மற்றும் இராணுவ நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.





