அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஹொலிவூட் இயக்குனர் ராப் ரெய்னரும் அவரது மனைவி மிச்செலும் வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
ரெய்னரும் அவரது மனைவி மிச்செல் சிங்கர் ரெய்னரும் கத்திக்குத்து காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் விசாரணைகள் நடைப்பெற்று வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் ரெய்னருக்கு 78 வயது பூர்த்தி அடைந்துள்ளது.
இந்த சம்பவத்தை விசாரணை செய்ய லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் திணைக்களத்தின் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களை துப்பறியும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விசாரணை செய்து வருவதாகவும், வீட்டில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் திணைக்களத்தின் தலைவர் மைக் பிளாண்ட் தெரிவித்துள்ளார்.
ரெய்னர் ஸ்லீப்லெஸ் இன் சியாட்டில் மற்றும் தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அவர் அண்மையில் தி பியர் என்ற நகைச்சுவை-நாடகத் தொடரில் விருந்தினர் வேடத்தில் நடித்தது சிறந்த படைப்பாக திகழ்ந்தது.
1989 ஆம் ஆண்டு “வென் ஹாரி மெட் சாலி” என்ற திரைப்படத்தை இயக்கிய போது அவர் மிச்செல் சிங்கரை சந்தித்தார். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
மிச்செல் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினார். அத்துடன், “ட்ரம்ப்: தி ஆர்ட் ஆஃப் தி டீல்” என்ற புத்தகத்தின் அட்டைப்படத்தில் தோன்றும் டொனால்ட் ட்ரம்பின் படத்தை அவரே படம்பித்துள்ளார்.




