300 கிலோ எடை கொண்ட தேவாலய மணியைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள்

ஜேர்மன் நகரமொன்றில், 300 கிலோ எடை கொண்ட தேவாலய மணி ஒன்றைத் திருடிச் சென்றுள்ளார்கள் மர்ம நபர்கள் சிலர். ஜேர்மனியின் Bremen நகரில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த 300 கிலோ எடை கொண்ட மணியை செவ்வாயன்று சிலர் திருடிச் சென்றுள்ளார்கள்.

இந்நிலையில், மறுசுழற்சி மையம் ஒன்றில் பணி புரியும் ஒருவர், தன்னிடம் இரண்டுபேர் ஒரு மணியைக் கொண்டுவந்து விற்றதாகத் தெரிவித்துள்ளார்.

 

பின்னர் தேவாலய மணி திருட்டு குறித்து தான் கேள்விப்பட்டதாகவும், இது அந்த மணியாக இருக்கலாம் என்று எண்ணி பொலிசாருக்கு தகவல் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் கொடுத்த தகவலால், திருட்டுப் போன தேவாலய மணி மூன்றே நாட்களில் மீட்கப்பட்டுள்ளது.

தேவாலய மணி மாயமானதால் மக்கள் அதிர்ச்சியடைந்ததுடன், கவலையும் அடைந்திருந்த நிலையில், அது திரும்பக் கிடைத்துள்ள விடயம் மக்களை ஆனந்தமடையச் செய்துள்ளதாக தேவாலய போதகரான ஏஞ்சலா (Angela Walther) தெரிவித்துள்ளார்.

அந்த மணி, சுமார் 10,000 யூரோக்கள் மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.