ஒப்பந்தம் ஒன்றை நீடிப்பதற்காக 41 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட சுகாதார அமைச்சின் (ஓய்வு) பிரதான சட்ட அதிகாரியை எதிர்வரும் மே 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் பயன்படுத்தப்படும் ‘மெடி ஹவுஸ் எனும் கட்டிடத்தை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்வது தொடர்பான விவகாரத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த கட்டிடத்துக்கான குத்தகை ஒப்பந்த காலத்தை நீடிப்பதுக்காக மூன்று புதிய ஒப்பந்தங்களைத் தயாரித்துக் கொடுப்பதற்கு, ‘ஒப்பந்தத் தயாரிப்பு கட்டணம்’ என்ற பெயரில் சந்தேகநபர் 4,134,887 ரூபாயை இலஞ்சமாக கோரியுள்ளார்.
குறித்த தொகையில் 20 இலட்சம் ரூபாயினை ஏற்கனவே பெற்றுக்கொண்ட சந்தேகநபர், எஞ்சிய தொகையினை வழங்குமாறு அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, ‘மெடி ஹவுஸ்’ தனியார் நிறுவனத்தின் பெயரில் மக்கள் வங்கியில் வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலையைப் பெற்றுக்கொண்ட போதே, அஹிட் ரியாசா அஹமட் எனும் குறித்த முன்னாள் அதிகாரி கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (21) மாலை 3.45 மணியளவில் இவ்வாறு மேற்படி அதிகாரி கைதுசெய்யப்பட்டார். கைதான சந்தேகநபர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் மே 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



