அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்டெமிஸ் II விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இலங்கை நேரப்படி இன்று வியாழக்கிழமை (ஏப் 02) அதிகாலை 4:05 மணிக்கு விண்கலம் ஏவப்பட்டது.
இந்த விண்கலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ரீட் வைஸ்மேன் , விக்டர் குளோவர் ,கிறிஸ்டினா கோச் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் பயணித்துள்ளனர்.
இந்த பயணம் 10 நாட்கள் நீடிக்கும். நிலவைச் சுற்றி வந்து மீண்டும் பூமிக்கு திரும்புவதே இதன் நோக்கமாகும். மனிதர்கள் இதுவரை விண்வெளியில் பயணம் செய்யாத தூரமான 406,000 கிலோ மீற்றர் வரை இந்த விண்கலம் செல்லவுள்ளது.
1970-இல் அப்பல்லோ 13 விண்கலம் சென்ற 399,117 கிலோ மீற்றர் என்ற சாதனையை முறியடித்து, விண்வெளியில் மிக நீண்ட தூரம் பயணித்த மனிதர்கள் என்ற பெருமையை இவர்கள் பெறவுள்ளனர்.
1972-க்குப் பின்னர் மீண்டும் நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும் நோக்கில் இந்த ‘ஆர்டெமிஸ்’ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2028-ஆம் ஆண்டில் ஆர்டெமிஸ் IV திட்டத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் மனிதர்களைத் தரையிறக்க நாசா திட்டமிட்டுள்ளது.
சீனா 2030-ஆம் ஆண்டளவில் நிலவில் மனிதர்களைத் தரையிறக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே அமெரிக்கா இச்சாதனையைப் படைக்கத் தீவிரம் காட்டி வருகிறது.
நாசாவின் மிக சக்திவாய்ந்த ஸ்பேஸ் லொன்ச் சிஸ்டம் (Space Launch System) ரொக்கெட் மூலம் ‘ஓரியன்’ (Orion) விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் ஓரியன் விண்கலத்தைத் தாமாகவே இயக்கி அதன் கட்டுப்பாட்டுத் திறனைச் சோதிக்கவுள்ளனர்.












