அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிய வாழ் ஈழத்தமிழ் மற்றும் தமிழக, கேரள உறவுகளே!
வணக்கம்.
தமிழ்மீதும், தமிழர்கள் மீதும் ஆர்வம் கொண்டவராகவும், தமிழீழத் தாய்க்கும், கேரளத் தந்தைக்கும் மகனாகி “வேடன் ” என்ற அடையாளத்தோடு, இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்டு, களியாட்ட வியாபார நிகழ்வினை எதிர்வரும் 09.05.2026 சனிக்கிழமை அன்று, யேர்மனியின் மத்திய மாநிலத்திலுள்ள நெய் (xantener str 07, 41460 Neuss) நிகழ்த்தவுள்ளமையினை வன்மையாகக் கண்டிப்பதோடு, அதனை இடைநிறுத்துமாறும், இந்நிகழ்வினைப் புறக்கணிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழ்த்தேசிய இனத்தின் மீதான வன்கொடுமைகளைப் புரிந்த சிரீலங்காப் பேரினவாதமும், அந்தப் பேரினவாத நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக ஆலோசனைகள் மற்றும் போர்த்தளபாடங்களை வழங்கிய இந்தியா உள்ளிட்ட உலக வல்லாதிக்க அரசுகளின் துணைகொண்டு, 2009 மே மாதத்தில், முள்ளிவாய்க்கால் மண்ணிலே நிகழ்த்திய அதியுச்ச இனவழிப்பிலே, குருதிபடிந்து, வலிநிறைந்து கிடப்பதும், அந்த நாட்களைத் தமிழினம் நினைவேந்தி வணங்குவதோடு, அந்த நாட்களையே நீதியின் திறவுகோலாக கையிலேந்தி உலக நீதிக்காக போராடி வருகின்றார்கள்.
உலகெங்கிலுமுள்ள எமது ஈழத்தமிழர்களும், அவர்களுடைய வலியுணர்ந்த தமிழகத் தமிழர்களும், 2009ஆம் ஆண்டின் பின்னரான ஒவ்வொரு ஆண்டின் மே மாதத்திலும், எமது இனம் சுமந்த வலிகளுக்கு ஒத்தடமாகவும், நினைவேந்தலின் ஆதாரமாகவும் தமது மனச்சான்றுகளால் ஆழப் புரிதல்கொண்டு, ஆன்மாக்களின் அமைதி வேண்டியும், நீதிவேண்டியும் போராடி வருகின்றனர்.
தமிழரின் நீதிகோரும் இந்தப் போராட்ட வலிமிகுந்த நாட்களையும், அக்காலத்தே கொன்றொழிக்கப்பட்ட இலட்சக்கணக்கான உயிர்களின் கனதியை உணர்ந்தும், அவற்றையெல்லாம் அசட்டை செய்தபடி, உதாசீனமாக்கி தமது தனிப்பட்ட வியாபார மற்றும் வருவாய்ப் புகழ்ச்சிக்காக, மக்களது அதிலும் குறிப்பாக இளையோரது இயல்பு மனங்களை ஊடறுத்து, தான்தோன்றித்தனமாகச் செயற்படுவோரை ஒவ்வொரு ஈழத்தமிழர்களும் வன்மையாக கண்டிக்கத் தயாராக வேண்டும்.
மே மாதத்தின் ஆரம்ப நாட்களிலிருந்து அதியுச்ச உயிர்பலியெடுக்கப்பட்ட மே 18 வரையான நாட்களை எந்தவொரு தமிழ் மக்களும் தாங்கள் உயிர்வாழும் காலம்வரை மறந்துசெல்ல மாட்டார்கள். இருப்பினும் அந்த நாட்களிலே திட்டமிடப்படும் களியாட்டங்கள் மீதும், அவற்றை ஒழுங்குபடுத்துவோர் மீதும், பங்கேற்போர் மீதும் பலத்த சந்தேகங்கள் உருவாகுவதை தவிர்க்க முடியாது.
யேர்மனியின் மத்திய மாநிலத்திலே முன்னெடுக்கப்படவுள்ள களியாட்ட நிகழ்வின் பிரதான,முழுமையான விளம்பரதாரர்களாக, “கவித்துளி” மற்றும் “KARIKAALA” முகநூல்த் தளங்களே ஈடுபட்டு வருகின்றனர். எமது மக்களின் ஆதரவைப் பெறத்துடிக்கும் இவர்கள், ஒட்டுமொத்த இனத்தின் வலிமிகுந்த நாட்களைக் கணக்கிலெடுக்காமை கண்டனத்திற்குரியதாகும். இதுபோன்ற அவநாகரீகச் செயல்களைத் தவிர்க்குமாறு தெரிவிக்கும் உரிமை ஒவ்வொரு மக்களுக்குமுண்டு.
முள்ளிவாய்க்கால் மண்ணிலே விழிமூடிய அத்தனை ஆன்மாக்களின் பலிபீடத்திலும் நின்றபடி, வலிமிகு நாட்களை நினைவேந்துவோம். உலக நீதியாளர்களை நோக்கி எமக்கான நீதிகோருவோம். இது ஒவ்வொருவருக்குமான தார்மீகக் கடமையென உறுதியெடுப்போம். களியாட்ட நிகழ்வுகளைப் புறக்கணிப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.



