தமிழ்த்தேசியத்தின்பால் பற்றுறுதிகொண்டு உழைத்த செயற்சோதி ஒன்று உறங்கிற்று. தமிழ்ச்சங்கத் தலைவி, தமிழ்ச்சோலை நிர்வாகி, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர், தமிழாசிரியர் எனப் பன்முகவாற்றல்கொண்ட திருவாட்டி கோகுலதாஸ் கலாஜோதி அவர்களின் மறைவு பிரெஞ்சுத் தமிழ்த் தேசியப்பரப்பிற்குப் பேரிழப்பாகும்.
தேசியம் சார்ந்த தனது கருத்தில் விடாப்பிடியான உறுதியோடும், வெளிப்படையான கருத்தாடலோடும் திடமான உள்ளத்தோடும் எம் கண்முன்னே உலாவந்த கலாஜோதி மறைந்திருப்பது பிரெஞ்சுத் தமிழ்த்தேசியச் செயற்பாட்டளர்களுக்குப் பெருந்துயரம் தரும் செய்தியாகும்.
புன்னகைதோய்ந்த முகம், அனைவரையும் அணைத்துச் செயலாற்றும் திறன், வரித்துக்கொண்ட செயற்பாடுகளில் காட்டும் தீவிரம் எனத் தனித்தன்மை கொண்டவர் கலாஜோதி.
தன்னொளியைத் தேசியத்திற்குக் கொடையென வழங்கி மறைந்திருக்கும் கலாஜோதியின் பற்றுறுதியும் செயற்றிறனும் எம் அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணமாகும். அன்னாரின் இழப்பினால் ஆழ்துயரில் ஆழ்ந்திருக்கும் உற்றார், உறவினர், நண்பர்களுக்குத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் இரங்கல்கள்.
தமிழ்த்தாயின்பால் களமாடிய கலாஜோதி இனி இயற்கை அன்னையின் மடியில் இளைப்பாறட்டும்.






