செம்மணி குறித்து சர்வதேச விசாரணை அவசியம் – அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் பேரணி

செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் என அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழ தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பேரணியின் போது ஈழதமிழர்கள் ஐநா மற்றும் வெளிநாடுகளின் தூதரகங்களிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் தமிழ் ஏதிலிகள் பேரவை  தெரிவித்துள்ளதாவது.
சிறிலங்கா அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை செம்மணிமனித புதைகுழிகள் மூலம் மீண்டும் தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழ தமிழர்கள் இது குறித்த கவனத்தை ஈர்க்கும் விதத்தில் நேற்று பேரணியொன்றை முன்னெடுத்தனர்.

 

 

இந்த மனித புதைகுழிகள் தனியானதொரு சம்பவம் இல்லை,அமைதியான விதத்திலும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலையிலும் தொடரும் இனப்படுகொலையின் ஒரு பகுதியே இந்த மனித புதைகுழிகள்.

அவுஸ்திரேலியாவிற்கான ஐநா தூதரகத்தின் முன்னாள் ஆரம்பமான பேரணி  ஐநா அலுவலகங்களை நோக்கியும் பல தூதரங்களை நோக்கியும் சென்றது.

 

 

ஐநா அலுவலகத்திடமும் உலக நாடுகளின் தூதரங்களிடமும் தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் உறுதியான நடவடிக்கை மற்றும் நீதியை கோரும் மகஜர்களை கையளித்தனர்.

இந்த பேரணியில்

இலங்கையில் உள்ள செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணையை ஆரம்பிக்கவேண்டும்.

செப்டம்பரில் இடம்பெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கை தொடர்பில் வலுவான தீர்மானமொன்றை நிறைவேற்றவேண்டும்.

 

 

அமெரிக்கா பிரிட்டன் கனடா போன்று அவுஸ்திரேலியாவும் இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை இராணுவஅதிகாரிகளிற்கு எதிராக பயணதடைகளை விதிக்கவேண்டும்.

 

 

இனப்படுகொலையிலிருந்து உயிர்தப்பியவர்கள் மற்றும் முக்கிய சாட்சிகளிற்குபாதுகாப்பு மற்றும் புகலிடத்தை வழங்கவேண்டும்.

இலங்கை இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்;டுள்ள நிலங்களை விடுவிப்பதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.

நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஒடுக்குமுறை சட்டங்களை நீக்குவதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.

தமிழர்கள் இனப்படுகொலைக்குள்ளானார்கள் என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவேண்டும் போன்ற வேண்டுகோள்களை பேரணியில் கலந்துகொண்டவர்கள் முன்வைத்துள்ளனர்.

 

 

செம்மணி மனித புதைகுழிகள் இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் மாத்திரமல்ல உலகிற்கான ஒரு அழைப்பு என தெரிவித்துள்ள தமிழ ஏதிலிகள் பேரவையின் பேச்சாளர் ரேணுகா இன்பகுமார் ஒவ்வொரு புதைகுழியும் நீங்கள் நீதிக்காக குரல்கொடுப்பீர்களா அல்லது பாராமுகமாகயிருப்பீர்களா என்ற கேள்வி எனவும் தெரிவித்துள்ளார்.