தமிழின அழிப்பு நினைவுநாள் 2025-யேர்மனி

18.05.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16ஆவது ஆண்டு நினைவுநாள் யேர்மனியின் டுசில்டோவ் (Düsseldorf)நகரில் பேரெழுச்சியோடு நினைவு கூரப்பட்டது.

நண்பகல் 12:45 மணிக்கு தொடரூந்து நிலையம் முன்பாக பெருந்திரளான மக்களோடு ஆரம்பமாகிய பேரணி, தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பிலும், தமிழாலயங்களது ஒப்பனையும் பாவனையும் எனும் வடிவத்தில் முள்ளிவாய்க்கால் காட்சிப்படுத்தல்களோடும் மத்திய மாநிலத்தில் அமைந்துள்ள மாநில நாடாளுமன்றத்தினை நோக்கிப் பேரெழுச்சியோடு நகரத் தொடங்கியது. பேரணி செல்லும் வழியெங்கும் ,கூடி நின்ற வேற்றின மக்களுக்கு இளையவர்கள் துண்டுப்பிரசுரங்களை வழங்க, பேரணியில் கலந்து கொண்ட மக்கள் வானதிர கொட்டொலிகள் எழுப்பியவாறும் சென்றனர். பிற்பகல் இரண்டு மணிக்கு மாநில நாடாளுமன்றத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தினைப் பேரணி வந்தடைந்தது.

முதலில் பேரணியில், ஒப்பனையும் பாவனையும் வழங்கிய தமிழாலயங்கள் திடலுக்கள் அணிகளாக வருகை தந்து, மேடையின் முன்பாக நின்றிருந்த காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது. தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுத்திடல் மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருக்க, நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்ற அருட்தந்தை அல்பெர்ட் கோலன் (Albert Koolen) அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்து வணக்க நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து மாவீரர்கள் மற்றும் பொதுமக்களிற்கான நினைவிடங்களிற்கு முன்பாக ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. ஈகைச்சுடரினை 27.09.1999 அன்று திருநெல்வேலி பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான மோதலின்போது வீரச்சாவடைந்த மாவீரர் கப்டன் இசைவாணன் என்றழைக்கப்படும் குணரத்தினம் திருவேந்தன் அவர்களது சகோதரர் திரு.குணரத்தினம் திருச்செல்வம் அவர்கள் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து மாவீரர் நினைவுப்படத்திற்கான மலர்மாலையினை முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இறுதிக்கணங்களின் சாட்சியமான திருமதி.தீபா ரவிச்சந்திரன் மற்றும் யேர்மனி தமிழ்ப்பெண்கள் அமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வி.தமிழினி பத்மநாதன் ஆகியோரும், பொதுமக்கள் நினைவுப் படத்திற்கான மலர் மாலையினை யேர்மனி இளையோர் அமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வி.வானதி நிர்மலநாதன் மற்றும் யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் துணைப்பொறுப்பாளர் திரு.சேரன் யோகேந்திரன் ஆகியோரும் அணிவித்தனர். இதனைத்தொடர்ந்து வருகை தந்திருந்த மக்கள் அனைவரும் சூடம் ஏற்றி, மலர் தூவி வணங்கினர்.

அகவணக்கத்தோடு ஆரம்பித்த இன அழிப்புநாள் நினைவுவணக்க நிகழ்வுகளில் முதலில் மதுரக்குரலோன் திரு. கண்ணன் அவர்களது இசை வணக்கம் இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து அருட்தந்தை திரு.அல்பேர்ட் கோலன் அவர்கள் நினைவுரை வழங்க ,”உயிர்சுமந்த வலியும் கஞ்சி காத்த உயிரும் ” எனும் தலைப்பில் யேர்மனி தாயகநலன் பொறுப்பாளர் திரு.இராஜன் அவர்கள் உரையாற்றியதும் திடலில் அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த கஞ்சி வழங்கப்பட்டது.தொடர்ந்து யேர்மன் குருதிஸ்தான் அமைப்பின் சார்பாக Frau மேடியா அவர்களும் ,இடதுசாரிக்கட்சியின் டுசில்டோவ் நகர மாவட்டப்பேச்சாளர் திரு.மக்சி கிஸ்ராஸ்,மற்றும் youngs struggle சார்பாக யேர்மனிய நாட்டைச் சேர்ந்த இளையவர் ஒருவரும் உரையாற்றியிருந்தார்கள்.

யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினது வடிவமைப்பில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பினைச் சித்தரிக்கும் உரையாடல் நிகழ்வினைத் தொடர்ந்து யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு.திருநிலவன் அவர்களது நினைவுரை இடம்பெற்றது. யேர்மனி கலை பண்பாட்டுக் கழக ஆசிரியர்களில் ஒருவரான செல்வன்.நிமலன் சத்தியகுமாரின் மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு சமந்த பாடலுக்கு உணர்வு பொங்க நடனம் வழங்கியதும் தொடர்து தமிழ் இளையோர் அமைப்பினைச் சேர்ந்த அனைவரும் ஒருமித்து நின்றபடி உறுதிமொழியினைச் செல்வி.வானதி அவர்கள் வாசிக்க மக்கள் அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

நிறைவாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” எனும் பாடலோடும் “தமழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் தாரக மந்திரத்தோடும் தமிழின அழிப்பு நினைவு நாள் 2025 வணக்க நிகழ்வுகள் எழுச்சியோடு நிறைவு பெற்றது.