பொன்விழா ஆண்டில் கால்பதிக்கும் தமிழர் உயிர்ப்பின் கோட்பாடுகள்

பூமிப்பந்தின் விரிப்பில் தெற்காசியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள இலங்கைத் தீவிலே, தமிழர் வாழ்வியலின் அடையாளப் பூர்வீக நிலமாக ‘ஈழம்’ என்று மரபுவழித் தொடரால் அழைக்கப்பெற்ற தமிழீழ தேசத்தினதும், இலக்கிய மரபுகளின் தனிச்சிறப்பியல்பினால்த் துலங்கும் தமிழ் மொழியினதும் மீட்சிக்கும், விடுதலைக்குமாகத் தமிழினமானது தமது ஆத்ம பலத்தின் அத்திவாரத்திலிருந்து ஆன்ம விழிப்போடு, அற்புதமான தியாகங்களால் நிறைந்து, வலிகளையும், வேதனைகளையும் சுமந்து, குருதி பாய்ச்சி, உயிர்க்கொடைகளால் உரமேற்றி, நம்பிக்கை நாணை இறுகப்பற்றிக் கட்டி வளர்க்கப்பட்ட “தமிழீழ விடுதலைப் புலிகள் ” என்ற சுயத்தை இழக்காத வரலாற்று இயக்கத்தின் கோட்பாட்டு உயிர்ப்பானது, ஐம்பதாவது அகவையேற்றம் பெற்று பொன்விழாப் பூண்டுள்ளது.

வட்டுக்கோட்டைத் தீர்வாகத் தமிழினம் வழங்கியதும், பெற்றதுமான தமிழீழத் தனியரசை நிறுவுதலே தமிழினத்தின் முடிந்த முடிவாகிய ஆணைத் தளத்திலிருந்து, அந்த வெற்றி இலக்கினை நோக்கிய ஆத்மார்த்தமான உழைப்புக்காக அணியமாகிய இளந்தலைமுறையினருக்கு மத்தியிலே, மனித நாகரீகமும், அறச்சீற்றமும் தாங்கி எதிர்பார்க்கும் சுதந்திர உரிமையின் திசைநோக்கி, ஒரு மாணவப் பருவத்தையும், கரைந்துவிடாத திடமான உறுதியையும் கொண்டிருந்த இளைஞனாக, இலட்சியக் குவியலின் மைய உந்துவிசையாகி நகரத் தொடங்கிய கோட்பாட்டு வடிவமே மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய இனத்தின் ஆன்மத் துடிப்பாகும்.

தொன்மையும் செழுமையும் மிக்க எமது முன்னைத்தமிழின் வீரமரபை மீண்டுமாகக் கட்டிவளர்த்து, சொல்லுக்கு முன்னான செயலாக்கி, தமிழரின் எழுச்சியையும் நிமிர்வையும் உறுதிசெய்து, ஒட்டுமொத்த தமிழீழ தேசத்தின் ஆன்ம உயிர்ப்பைத் தட்டியெழுப்பி, வீறுகொண்ட இனத்தின் அடிநாதமாக, அச்சாணியாகத் திகழ்ந்து, மக்களது எழுச்சியையும், மாவீரர்களின் அற்புதமான தியாகங்கையும் வீச்சாகக் கொண்டு, கெரில்லா முறமைகளாலே ஏறிக்கடந்து, எதிரிகளைத் திகைப்பூட்டி, பகைவனிடமே போர்க்கருவிகளைப் பறித்தெடுத்து, மரபுவழிக்கு மாற்றலாகி தரை,கடல்,ஆகாயமென விரிந்தெழுந்த தமிழர் சேனையின் உட்பரிமாணம், தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மகுடம் தரித்திருந்தது.