South Asians & Diaspora
இந்த கடத்தல் சம்பவங்களை தடுக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் கியூ பிரிவு, மத்திய, மாநில உளவுத்துறை, கடற்படை, கடலோர காவல் படை, சுங்கத்துறை, மரைன் பொலிஸ் என பாதுகாப்பு துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு பந்தய புறாக்கள் கடத்த இருப்பதாக கியூ பிரிவு ராமநாதபுரம் ஆய்வாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (6) நள்ளிரவு கியூ பிரிவு பொலிஸார் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகம் மற்றும் பாம்பன் பாலத்தில் மறைந்திருந்து கண்காணித்து வந்தனர்.
இன்று (7) அதிகாலை ராமேஸ்வரம் நோக்கி வந்த கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் பாம்பன் வீதி பாலத்தில் வெகு நேரமாக நின்றுகொண்டிருந்ததை கண்ட கியூ பிரிவு பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் சுற்றிவளைத்து காருக்கு அருகே நின்றுகொண்டிருந்த இருவரிடம் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த கியூ பிரிவு பொலிஸார் காரை திறந்து சோதனை செய்தபோது காருக்குள் 6 இரும்பு கூடைகளில் 120 புறாக்கள் வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
இதனையடுத்து காருடன் பந்தைய புறாக்களை பறிமுதல் செய்த கியூ பிரிவு பொலிஸார் காரில் வந்த மதுரை சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த நவாப் செரிப் (22) மற்றும் மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (39) இருவரையும் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதனிடையே கியூ பிரிவு பொலிஸார் புறாவுடன் காரை பறிமுதல் செய்த பின் பாம்பன் வடக்கு கடற்கரையில் சோதனை செய்ய சென்றபோது அங்கு நின்றுகொண்டிருந்த நாட்டுப்படகு ஒன்று கியூ பிரிவு பொலிஸாரை கண்டதும் அங்கிருந்து கடலுக்குள் தப்பிச் சென்றது. இதனையடுத்து தப்பிச்சென்ற நாட்டுப் படகு குறித்து மரைன் பொலிஸார் உதவியுடன் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பிடிபட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில் பந்தய புறாக்கள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த மதுரையில் இருந்து கொண்டுவரப்பட்டன என ஒப்புக்கொண்டனர்.
இலங்கைக்கு கடல் வழியாக பந்தய புறாக்கள் கடத்தப்பட்டு பிடிபட்டமை இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.