சிறை வைக்கப்பட்டு 50வது நாளை எட்டும் தருணத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

தனது சிறைவாசம் நாட்டு மக்களுக்கு பொருளாதார நிவாரணத்தையும் கலாசார பாரம்பரியத்தின் பாதுகாப்பையும் தருமானால், 50 நாட்கள் மட்டுமல்ல, 500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

திறைசேரியில் பணம் இருப்பதாகக் கூறப்பட்டபோதிலும், மக்களுக்கு எந்தவித பொருளாதார நிவாரணமும் கிடைக்கவில்லை என்றும், நாட்டின் பொருளாதாரச் சவால்களைக் கையாள்வதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாட்டின் பௌத்த கலாசார அடையாளத்தையும் மத உணர்வுகளையும் மதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், 'கவந்திஸ்ஸ' எனும் கம்பீரமான யானையைப் பாதுகாக்கத் தவறியமைக்காக தேசம் என்ற ரீதியில் ஆழ்ந்த கவலையடைவதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது தந்தை மஹிந்த ராஜபக்‌ஷ நாட்டின் ஒவ்வொரு உயிரினத்திற்கும் சுதந்திரமாக வாழும் உரிமையை வழங்கியவர் என்றும் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பிரச்சினைகளின் சுமையை ஒரு குடும்பத்தின் பின்னால் மறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும், தன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து நீதிமன்றம் தம்மை விடுவிக்கும் எனத் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணம் மூன்றில் இரண்டு பங்காகக் குறைக்கப்பட்டு, இறக்குமதி விலையிலேயே எரிபொருள் வழங்கப்பட்டு, சம்பள உயர்வு, வரி விலக்குகள், அத்தியாவசியப் பொருட்களின் விலைக் குறைப்பு ஆகியவை சாத்தியப்படுமானால், 500 நாட்கள் சிறை தண்டனையைக் கூட மக்களுக்காக ஏற்கத் தயார் என அவர் சவால் விடுத்துள்ளார்.

சிறைச் சுவர்களுக்கு அப்பால் தமக்கு மக்கள் ஆதரவு இருப்பதாகவும், தம்மை சிறையில் அடைத்தாலும் மக்களது எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் சிறைபிடிக்க முடியாது என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.