காலங்காலமாகப் பெண்ணினம் தன் ஆளுமைப் பண்பைச் சகல துறைகளிலும் நிலைநாட்டி வந்திருப்பதை வரலாறுகளும் இலக்கியங்களும் எடுத்தியம்புகின்றன. அரசியல் களமாகட்டும், அண்டவெளி ஆய்வாகட்டும், ஏர் முனைகளாகட்டும், போர் முகங்களாகட்டும்;, இலக்கியத் துறைகளாகட்டும், இயந்திர இயக்கமாகட்டும், நாட்டு வீட்டு நிர்வாகங்களாகட்டும் – அனைத்துத் துறைகளிலும் அவர்கள் முத்திரை பதித்தனர், பதிக்கின்றனர். ஆயினும், சமூகத் தடைகளைத் தகர்த்தெறிந்து ஆண்களுக்குச் சமமாக உழைத்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இத்தகைய சாதனைப் பெண்மணிகளுள் ஒருவர்தான் ஈழத்து எழுத்துலகின் துருவ நட்சத்திரமாகத் திகழும் எழுத்தாளர் திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் அம்மையார்!
ஆங்கிலக் கவிஞன் சேக்ஸ்பியர் கூறியதைப் போன்று, “உலகமெனும் நாடக மேடையில் நடிப்பதற்கு எத்தனையோ மனிதர்கள் வருகிறார்கள்;, போகிறார்கள். அவர்கள் எல்லோரும் நம் மனதில் நிலைபெற்று நின்று விடுவதில்லை.” சிலர் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. வெகுசிலரை மாத்திரம் அவர்கள்; மறைந்த பின்னரும் நினைத்துப் பார்க்கிறோம்;, அவர்தம் செயலைப் போற்றுகிறோம்;, அந்த விழா(த) நாயகர்களுக்கு விழா எடுக்கிறோம். காரணம், அவர்கள் செய்திருக்கும் செயற்கரிய செயல்கள். இந்தப் பாராட்டுப் பத்திரம் திருமதி வள்ளியம்மை அம்மையாருக்கும் பொருத்தம்.
ஈழமணித் திருநாட்டின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் சுழிபுரம் எனும் இடத்தில், ஆசைப்பிள்ளை – செல்லமுத்து தம்பதிகளுக்கு 1938.10.07ஆம் திகதி மகளாகப் பிறந்த திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள், சிறந்த எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவருடன் ஒன்பது சகோதரர்கள் கூடப்பிறந்தனர். நோயின் பிடியில் சிக்கி எழுவர் அடுத்தடுத்து இறந்துவிட, ஒரு தம்பியும் தங்கையுமே எஞ்சினர். தங்கை இலட்சுமிப்பிள்ளை கணித ஆசிரியராக இருந்து, கனடா நாட்டில் காலமாகிவிட்டார். தம்பி பொன்னையா ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியாக வவுனியாவில் வசிக்கிறார். திருமதி வள்ளியம்மை அம்மையார் மூத்த சகோதரி ஆதலால், தம்பி தங்கையர்க்கு அன்னையாகவும் இருந்தார். அவர்களுக்கு அறிவு அமுதூட்டி மகிழ்ந்தார்.
.
திருமதி வள்ளியம்மை அம்மையார் ஆரம்பக் கல்வி முதல் ளுளுஊ வரை பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் கற்றவர். கற்கும் காலத்திலேயே எழுத்தார்வம் மிக்கவராகத் திகழ்ந்த இவர், வாசிப்பின் மீது தீராக் காதல் கொண்டிருந்தார். வாசிப்பின் பாலிருந்த ஈர்ப்பு இவரை எழுத வைத்தது. எழுத்தாற்றலை வெளிப்படுத்தி ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்ற இவர், பத்திரிகைகளுக்கும் ஆக்கங்கள் எழுதினார். “நான் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற காலத்தில், ‘மெய்கண்டான்’ என்ற பெயரில் மாணவர் கையெழுத்துப் பத்திரிகை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மாணவர் சங்கக் கூட்டத்தில் வாசிக்கப்படும். அதில் சிறுகதை, கவிதை, விடுகதை, நொடி, பழமொழி, துணுக்குகள் முதலியன வெளிவரும். உப பத்திராதிபர், பத்திராதிபர் என்ற பதவிகளில் நான் இருந்தபோது (1953), நிறைய எழுதியுள்ளேன். அதற்கு எங்கள் குருவான பண்டிதர் அமரர் அ.ஆறுமுகம் அவர்கள் தூண்டுகோலாக இருந்தார். அவர் தந்த ஊக்கமும் தன்னம்பிக்கையும் என்னை அதிகம் எழுதத் தூண்டியது.” என்று கூறிய அம்மையாரது சிறுகதைகள் கலைமதி, கலைச்செல்வி, சுதந்திரன், வீரகேசரி, ஜனசக்தி, ஜீவநதி, தாயகம் ஆகிய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.
ளுளுஊ கல்வியை நிறைவுறுத்திய அம்மையார், யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அரச நெசவுக் கல்லூரிக்;;;;குத் தெரிவாகி நெசவுக் கற்கை நெறி பயின்றார். அத்தோடு, ஆரிய திராவிட பா~hவிருத்திச் சங்கத்தில் இணைந்து பண்டிதர் படிப்பினை மேற்கொண்டு பாலபண்டிதர் தேர்வில் சித்தி பெற்றார். சமஸ்கிருத மொழியிலும் பாண்டித்தியம் பெற்றார். நெசவுக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்தபின் 21ஆவது வயதில் அரச நெசவு ஆசிரியராகிப் பல்வேறு இடங்களில் பணியாற்றினார். அரச பணி நிமித்தம் சிங்கள மொழியையும் நன்கு கற்றுத் தேர்ந்தார். இவர் ஆங்கில மொழியிலும் சிறந்த பாண்டித்தியம் உடையவர்.
இவர் நெசவுக் கல்லூரியில் கற்கும் காலத்தில் யாழ். கொல்லங்கலட்டியைச் சேர்ந்த பொதுவுடைமைவாதியான மு.யு. சுப்பிரமணியத்தைக் காதலித்து வந்தார். சாதி வேறுபாடு காரணமாக இருவரது பெற்றோர்களும் திருமணத்திற்கு மறுப்புத் தெரிவிக்க, 1962ஆம் ஆண்டு தைப்பூசத் தினத்தன்று இருவரும் கலப்புத் திருமணம் செய்துகொண்டனர். உலகப் பாட்டாளிகளின் விடுதலைச் சின்னமான அரிவாளும் சம்மட்டியும் பதித்த சின்னமே திருமதி வள்ளியம்மை அம்மையாரின் தாலிச் சின்னமாகியது. சாதிய இறுக்கத்தால் கட்டுண்டு கிடந்த யாழ்ப்பாணத்துக்கு முற்போக்கு வித்தினைத் தூவி, சமூக சீர்மியத்தினை இடித்துரைத்தனர் இத் தம்பதியர்.
சாதியைக் காரணம் காட்டி இவர்களை எந்த வீடுகளிலும் ஏற்க மறுத்ததால், பல வாடகை வீடுகளில் வசிக்க நேரிட்டது. ஆனாலும், திருமதி வள்ளியம்மை அம்மையார் எதற்கும் சளைக்காத புதுமை விரும்பியாகத் திகழ்ந்தார். இவர்களின் கருத்தொருமித்த இல்லற வாழ்க்கையின் பயனாக சத்தியராசன் (மீரான் மாஸ்டர்), சத்தியமலர், சத்தியகீர்த்தி எனும் முத்தான மூன்று பிள்ளைச் செல்வங்கள் கிடைத்தனர். மூவரையும் கண்போல காத்துச் சிறப்புற வளர்த்தனர். வறுமை ஒரு பக்கம், சொந்த வீடின்மை மறுபக்கம் எனப் பல துன்பங்களைச் சந்தித்தாலும், வந்தோருக்கெல்லாம் விருந்தளித்துச் செம்மையுற வாழ்ந்தனர்.
‘காத லொருவனைக் கைப்பிடித்தே – அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி”
என்ற அமரகவி பாரதியின் வாக்கிற்கிணங்க, சமூக விடுதலைக்காகவும் தீண்டாமைக்கு எதிராகவும் குரல் கொடுத்துப் போரிட்டு வந்த கணவரது கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் அவரது கொள்கைளைப் பின்பற்றி வாழ்ந்து வந்த திருமதி வள்ளியம்மை அம்மையார், வீட்டுக்குள்ளே பெண்கள் முடங்கியிருந்த காலத்தில் கணவருடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தவர். பெண் முன்னேற்றத்திற்காக அதிகமதிகம் உழைத்தவர். பெண்கள் எப்பொழுதும் தங்கள் சொந்தக் கால்களில் நிற்க வேண்டும் என்று உரைத்தவர்.
பொதுவாக எழுத்தாளர்களுள் சமூக ஆர்வம் மிகுந்திருக்கும். இதற்குத் திருமதி வள்ளியம்மை அம்மையாரும் விதிவிலக்கல்ல. இவர் பதின்ம வயது முதல் இறுதி மூச்சை நிறுத்தும்வரை சமூக சேவையில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தவர்;. அதுமட்டுமல்ல, கல்விப் பணியிலும் ஈடுபட்டவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க உறுப்பினராக இருந்து எழுதும் கரங்களை ஊக்குவித்தவர். வடக்கில் மாதர் சங்க உருவாக்கத்திற்கு வித்திட்டு, சங்கத்தின் உதவிப் பொருளாளராகவும் கடமையாற்றியவர். தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்பாடுகளிலும் தாயகம் இதழின் ஆசிரியர் குழுச் செயற்பாடுகளிலும் விருப்புடன் ஈடுபட்டவர்.
தனக்கென ஒரு குடும்பம் அமைந்த பின்னர் அந்தக் குடும்பச் சுமைகளின் அழுத்தம் பலரது எழுத்தார்வத்தை நசுக்கி விடுவதுண்டு. சில பெண்களது குடும்பங்களில் அவர்களது எழுத்தார்வத்தைத் தூண்டிவிடக்கூடிய சூழ்நிலைகளும் ஆதரவுக் கரங்களும் கிடைக்காமற் போய்விடுவதும் உண்டு. இந்தத் துன்பியல் திருமதி வள்ளியம்மை அம்மையாரையும் விட்டுவிடவில்லை. இவரது கணவர் பொது வேலைகளில் முழுநேரப் பணியாளர் ஆகிவிட, குடும்பத்தின் அனைத்துப் பொறுப்புக்களையும் இவரே சுமந்தார். இவரது ஊதியத்திலேயே குடும்பத்துக்கான உணவு, உடை, கல்வித் தேவை, வீட்டுக்கு வருவோருக்கான விருந்தோம்பல், இன்னபிற செலவுகள் என அத்தனையும் நிறைவேறின. குடும்பச் சுமை கண்டு மனம் கோணாமல் அனைத்தையும் தனியொருத்தியாகச் செவ்வனே நிறைவேற்றிய அம்மையார், அனைவரையும் தாயைப் போல பேதமற்று நேசித்தவர்.
இவரது குடும்பச் செலவுகள் நாளாந்தம் அதிகரித்தன. பொதுச் செயற்பாடுகளில் கணவர் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தார். மூத்த மகன் சத்தியராசன் (மீரான் மாஸ்டர்) குடும்பப் பொறுப்புக்களில் பங்கெடுப்பார் என்று திருமதி வள்ளியம்மை அம்மையார் நினைத்திருந்தார். இவரது எண்ணத்திற்கு மாறாக மகன் இன விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். இதனால், 1984ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால்; சிறைப்பிடிக்கப்பட்டார். மகன் சிறையில் இருந்த காலத்தில் சிறைச்சாலைக்கும் வீட்டிற்குமாக ஓய்வற்றுத் திரிந்த திருமதி வள்ளியம்மை அம்மையார், மகனின் விடுதலைக்காக வேண்டாத தெய்வங்கள் இல்லை.
யாழ். குருநகர் இராணுவ முகாம், கோட்டை இராணுவ முகாம், பூசா இராணுவ முகாம், வெலிக்கடை சிறைச்சாலை, மகசீன் சிறைச்சாலை எனப் பல இராணுவ முகாம்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் கால்கள் கடுக்க நடந்தார். மகனை மீட்க அலைந்தார். இவரது தொடர்ச்சியான முயற்சிகள் மகனை விடுதலை செய்தன. எனினும், இவரது வாழ்வில் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. 1988இல் சம்பவித்த கணவரின் இறப்பு, 2000ஆம் ஆண்டில் வாகன விபத்தில் உயிர்நீத்த மகனின் இழப்பு என அடுத்தடுத்துத் துக்கங்கள் இவரை ஆட்கொண்டன. இருப்பினும், துக்கத்தைப் பலமாக மாற்றி வாழ்ந்தவர்.
திருமதி வள்ளியம்மை அம்மையார் கணவரின் இறப்பின் பின்னர் சிங்கப்பூருக்குச் சென்று இளைய மகனுடன் வசித்து வந்த காலத்தில், மீண்டும் புதுவீச்சுடன் எழுதத் தொடங்கினார். எழுதுவதற்கான வாய்ப்புகளைச் சிங்கை மண் அவருக்கு அளித்தது.
“நான் சிங்கப்பூரில் இருந்த காலத்தில் கவிமாலை, கவிச்சோலை ஊடாக ஒரு கவிஞராக மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டேன். அங்குள்ள ‘தமிழ் முரசு’ பத்திரிகை ஞாயிறு வெளியீடுகளில் ஈரம், நான், முள்மகுடம், கவிதையில் சிங்கை சிரிக்கிறாள், படிக்கட்டுகள் என்று பல தலைப்புகளில் எழுதியுள்ளேன். அதைவிட ஐந்து கவிதை நூல்களில் கூட்டாகப் பல கவிதைகளை மேற்படி இரண்டு கவி அமைப்புக்கள் வெளியிட்டன. சிங்கை மண் தமிழ் மொழிக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கும் மண்” என்று பெருமையுடன் கூறிய அம்மையார், “சிங்கை ஒளவையார்” என்று சிங்கப்பூர் நண்பர்களால் அழைக்கப்பட்டவர்.
இவர் சிங்கப்பூரில் வசித்த காலத்தில் மலாய் மொழியைக் கற்றுத் தேர்ந்தவர். கணினி அறிவையும் பெற்றுக்கொண்டவர். இவரிடம் எப்போதும் ஒரு சிறியரக மடிக்கணினி இருக்கும். இதன் மூலம் தன் எழுத்துக்களைத் தட்டச்சுச் செய்து பத்திரிகைகளுக்கு அனுப்பியதுடன், முகநூலிலும் பதிவேற்றம் செய்துவந்தார். சிங்கப்பூரில் கவிமாலை, கவிச்சோலை அமைப்புகளுடன் இணைந்து பல கவிதைகளை இயற்றி வாசித்தார், விவாத அரங்குகளில் முழங்கினார். பல பட்டங்களும் பரிசில்களும் பெற்றார். அன்றிலிருந்து பல நூல்களை எழுதத் தொடங்கியவர், இறக்கும்வரை எழுதிக்கொண்டே இருந்தார்.
சிங்கப்பூரில் வசித்தது போதும் என்று நினைத்த திருமதி வள்ளியம்மை அம்மையார், தன் மிகுதிக் காலங்களைப் பிறந்த மண்ணில் கழிக்க ஆசைப்பட்டார். 2019இல் இலங்கைக்கு வந்த இவர், “சத்தியமனை” வீட்டில் மகள் சத்தியமலர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இலங்கை திரும்பிய இவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூன்றாவது தமிழியல் ஆய்வு மாநாட்டில், “புலைமையாளர்” விருது வழங்கிக் கௌரவித்தது. வலிகாமம் மேற்குப் பிரதேச செயலகம் “கலைவாரிதி” பட்டம் கொடுத்துக் கௌரவித்தது.
வாழ்க்கைப் பயணத்தைக் கடக்கின்றபோது புதிய உறவுகளைச் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். சேர்ந்து பழகும் காலங்களில் அன்பைக் கொடுத்து, அவர்களிடமிருந்தும் கொஞ்ச அன்பைப் பெற்றுப் பண்டமாற்று அடிப்படையில் பாசத்தைப் பரிமாறிக்கொள்கின்றோம். இத்தகைய உறவுச் சேர்க்கையில் முகநூல் வாயிலாக எனக்கு அறிமுகமாகிய அம்மையார், ‘வெற்றிக்கு வலிகள் தேவை” என்ற நூல் வெளியீட்டிற்கு அழைப்பு விடுத்து முகமுகமாய்ச் சந்தித்துக்கொண்டார். அதுமுதல் அவரது குடும்பத்தில் என்னையும் ஒருத்தியாய் இணைத்து அன்பு பாராட்டிய அவரது தாயன்பு என்னுடன் இரண்டறக் கலந்தது.
“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே, அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று”
என்ற ஒளவை மொழிக்கிணங்க, அம்மையாருடன் மணிக்கணக்கில் பேசி மகிழ்ந்தாலும் இன்னும் இன்னும் பேச மீதம் இருக்கின்றது என்ற அவாவை உள்ளம் அள்ளித்தரும். இல்லம் நாடி வருவோரை முகமலர்ந்து உபசரிக்கும் இவரது பண்பு தமிழரின் விருந்தோம்பலைச் சொல்லித்தரும். “அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும்” என்ற வரிகளால் சடையப்பன் கொடையைக் கம்பர் புகழ்ந்து பாடுவார். இந்த வரிகள் அம்மையாரின் கணவருக்கு மிகவும் பிடித்தமானவை என்று அவர் அடிக்கடி கூறுவார். சடையப்பன் இல்லம் போலவே சத்தியமனையும் இருப்பதை நான் கண்ணுற்றேன்.
திருமதி வள்ளியம்மை அம்மையாரின் “முக வரிகள்” அவரது அயர்ச்சியற்ற உழைப்பை வெளிச்சம் போட்டுக் காட்டின. இந்தச் சமூகத்திற்கு இன்னும் நிறையச் செய்ய வேண்டும் என்ற வேணவாவை அவரது பேனா மைகள் தீட்டின. வாழ்க்கை கற்றுக்கொடுத்த அத்தனை பாடங்களிலும் தேர்ச்சியுற்ற அம்மையார், ஒரு நடமாடும் நூலகமாகத் திகழ்ந்தார். கணவரின் ஞாபகார்த்தமாகச் சத்தியமனை வளாகத்தில் ‘கே.ஏ.சுப்பிரமணியம் படிப்பகம்” என்ற டியிற்றல் மாடி நூலகம் ஒன்றினை அமைக்கத் தீர்மானித்தார். இவரது எண்ணத்தைப் புரிந்துகொண்ட மகள், தன் பிள்ளைகளின் உதவியுடன் நூலகம் அமைக்கும் பணியை ஆரம்பித்தார். இந்த நூலகத்திற்கான அடிக்கல் கணவருடைய 30ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இடப்பட்டது. நூலக அத்திபாரத்தினுள் சம்பிரதாயப் பொருட்கள் இடுவதை விடுத்து, கணவருடைய அஸ்தியை இட்டுக் கட்டியமை அம்மையாரின் புரட்சிகர மனப்பாங்கை எடுத்துக்காட்டுகின்றது.
இந்நூலகம் அமைக்கும் பணிக்கு இவரது மகன் சத்தியகீர்த்தியும் உதவி புரிந்ததுடன், நூலகத்திற்குரிய நம்பிக்கை நிதியத்தையும் உருவாக்கினார். அறுகுபோல் வேரூன்றி வளர்ந்த நூலகம் இன்று ஆல்போல் தழைத்துப் பலரும் பயன்பெறும் நிழற்குடையாக இருக்கின்றது. அறிவுத்தாகம் உடையோரை அரவணைத்து அன்பு பாராட்டிவரும் இந்நூலகம், மாணவச் செல்வங்கள் மத்தியில் எண்ணற்ற போட்டிகளை நடத்திப் பரிசில்களும் பாராட்டுக்களும் வழங்கி வருகின்றது. அம்மையாரின், “பாட்டி சொன்ன கதைகள்” நூல் வெளியீடு இவ்வருடம் இடம்பெற்ற (ஏப்ரல்-20) தினத்தன்று சிறுவர் நூலகம் அமைப்பதற்கான அடிக்கல்லும் இந்நூலகத்தின் அருகே இடப்பட்டமை சிறார்களின்; கல்வி மீது அம்மையார் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுகின்றது.
பழமரத்தை நாடிப் பறவைகள் வருவது போல இவரைத் தேடி அன்பர்களும் நண்பர்களும் நாளாந்தம் வந்துகொண்டிருந்தனர். முகம் முழுக்கப் புன்னகை நிரப்பி, இருகரம் கூப்பி வரவேற்று, அன்பு கலந்த மென்மைக் குரலில் உரையாடும் அம்மையாரின் தமிழ் உச்சரிப்பு மெச்ச வைக்கும். எல்லோர் மீதும் காட்டும் அக்கறை, பெற்றவள் அன்பை ஒத்திருக்கும். கடந்த வருடம் இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களும் அம்மையாரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், ஆசிகளும் பெற்றார். தன்னை நாடி வந்தோரையெல்லாம் இன்முகத்துடன் வரவேற்று அளவளாவி மகிழ்ந்த அம்மையார், “அடிக்கடி இங்கே வாருங்கள்” என்று பேரன்புடன் கூறுவார்.
காலத்தின் பெறுமதி தெரிந்தவர்கள் நொடிப்பொழுதையும் வீணாக்க விரும்புவதில்லை. இதற்கு வள்ளியம்மை அம்மையாரும் விதிவிலக்கில்லை. உறங்கி எழும் நேரம் தவிர, எஞ்சிய தன் பொன்னான நேரங்களைப் பயனுறச் செலவிட்டார். எழுத்தும் வாசிப்பும் இவரது இரு விழிகள் ஆயின. இவரது திறமைகளைத் தமிழுடன் இணைந்து பல மொழிகள் பேசின. இவரது நடை தளர்ந்த பின்பும் கையெழுத்து அச்சுப்பதித்தது போல மிக அழகாக இருக்கும். முதிர்ந்த வயதிலும் தன் கைகளால் அன்பானவர்களுக்குக் கடிதம் எழுதி நலம் விசாரித்த பண்பினையும் வாழ்த்துப்பா எழுதிக் கொடுத்த பாசத்தையும் இவரிடம் கண்டேன். எனக்கும் ஒரு வாழ்த்துப்பா எழுதித் தந்தமையை இவ்விடத்தில் நன்றியுடன் பதிவுசெய்கிறேன். “உள்ளங்கையில் உலகம், விரல் நுனியில் விபரம்” என்று சொல்லுமளவுக்கு கைபேசிகளுக்குள் ஆயிரம் ஆயிரம் கதைபேசிகள். இணையத்தில் உலாவி ஊர்ப் புதினம் முதல் உலகப் புதினம் வரை அறிந்திடும் அம்மையார், முகநூல் வழியாக எண்ணற்ற சொந்தங்களையும் சம்பாதித்தவர். தனக்குப் பிரியமானவர்களின் பெயரைக் ‘குறுக்குத் தையல் துணியில்’ தைத்து அன்பளித்தவர். அவற்றை எனக்கும் மகளுக்கும் கூட அளித்தவர்.
சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதனை நிரூபித்த அயர்ச்சியற்ற பெண் ஆளுமையான இவரை முதுமை ஆட்கொண்டும் முழுநிலவாய் ஒளிர்ந்தவர், பூரண பொற்குடமாய் மிளிர்ந்தவர். எண்பதுகளைத் தாண்டியும் எழுத்துலகில் நிலைத்திருந்தவர், நினைவாற்றலைத் தொலைக்காதிருந்தவர். தேடித் தேடிப் புதுப்புது விடயங்களைக் கற்பதில் ஆர்வமாய் இருந்தவர். 86 ஆவது வயதில் ‘ஓகன்’ இசைக்கருவி இயக்கும் கலை பயிலத் தொடங்கியமை இதற்குச் சான்று. முதுமையில் முடங்கி, மூலையில் ஒடுங்கிவிடாது இயங்கிய இவரது பேராற்றல் வியப்பளிக்கிறது. “கல்வி முக்கியம். அதற்கு வயது ஒரு தடையல்ல. நான் முப்பது வயதைக் கடந்த பின்புதான் சிங்கள மொழியைக் கற்றேன். அறுபது வயதைத் தாண்டிய பின்புதான் கணினி அறிவைப் பெற்றேன். அந்தக் காலப்பகுதியில்தான் ‘மலே’ மொழியையும் கற்றேன். சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல, அது எதற்கும் எல்லை வகுக்காது.” என்று கூறிய அம்மையார், சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்கின்றார்.
எண்ணங்களால் இமயமென உயர்ந்து, சொல்லும் செயலும் ஒன்றென வாழ்ந்து, மாதர்குல மாணிக்கமாய்த் திகழ்ந்த அம்மையார், தையல் தொழிலில் விற்பன்னர். சிறந்த பாடகர். சோதிடக்கலையிலும் தேர்ந்தவர். தன் எழுத்துக்களால் ஈழத்து எழுத்துலகின் துருவ நட்சத்திரமாக ஒளிர்கிறார். தனது பாடசாலைக்கால அனுபவங்களைத் தொகுத்து, “பசுமையான நினைவுகளில் பண்ணாகம் மெய்கண்டான்” என்ற தலைப்பில் வெளியிட்டார். இவரது கவிதைகளையும் சிறுகதைகளையும் தொகுத்து, ‘வெற்றிக்கு வலிகள் தேவை” எனும் தலைப்பில் தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு செய்தது. இந்நூலில், போர்க்காலங்களில் தனக்கு ஏற்பட்ட அவலங்களையும் வலிகளையும் எழுதியுள்ளார். சமகாலச் சமூகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு “கற்க கசடற” என்ற குறுநாவலை வெளியிட்டார். இந்நாவல் மூவினத்தவரின் ஐக்கியத்தைப் பேசும் ஒரு சிறந்த படைப்பு.
இவர் கண்முன்னே காணும் காட்சிகளை அல்லது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கதையாக எழுதுவதில் தேர்ந்தவர். அந்தவகையில், தன் வாழ்க்கையில் இடம்பெற்ற சம்பவங்களையும் அவற்றை எவ்வாறு எதிர்கொண்டு கடந்து வந்தார் என்பதையும் அனுபவ மொழியாக, “வாழ்வின் சந்திப்புகள்” என்ற தலைப்பில் முகநூலில் பதிவிட்டு வந்தார். இப்பதிவுகள் பார்வையாளர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்பதிவுகளைத் தொகுத்து, “ஒரு கம்யூனிஸ்ட் இணையர் வாழ்வின் சந்திப்புகள்” என்ற தலைப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியிட்டார். இவ்வருடம், “பாட்டி சொன்ன கதைகள்” என்ற தலைப்பில் சிறுவர் கதைப்புத்தகம் ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். இரண்டாவது பகுதியான “பாட்டி சொன்ன கதைகள் – 2” என்ற நூல் தொகுப்பை கே.ஏ.எஸ். சத்தியமனை நூலகம் விரைவில் வெளியிடவுள்ளது.
மேலும், இவர் எழுதிய “மனோன்மணீயம்” என்ற கவிதை நாடக நூல் 2025.07.26ஆம் திகதி இடம்பெற்ற அம்மையாரின் நினைவுப்பகிர்வு நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்நூல் இளம் தலைமுறையின் காதல் அனுபவம், வீரம், தமிழ் மேல் கொண்ட பற்று போன்ற விடயங்களை உள்ளடக்கியுள்ளது. அம்மையார் எழுதி வைத்துள்ள, “என்னூர் சுழிபுரம்”, “புராண இதிகாசக் கதைகள்” போன்ற நூல்களை கே.ஏ.எஸ். சத்தியமனை நூலகம் வெளியீடு செய்யவுள்ளது.
மனைவியாக, தாயாக வாழ்வில் சவால்கள் பலவற்றைச் சந்தித்த போதெல்லாம் துவண்டுவிடாது போராடிய திருமதி வள்ளியம்மை அம்மையார், மூச்சுள்ளவரை மானுடநேயம் உள்ளவராக, சமுதாயப் பிரக்ஞை உடையவராக இருந்தவர். பெண் என்பவள், “கூடிக் கலையும் காகக் கூட்டம் அல்ல. அவள் கூடிப் பொழியும் மேகக் கூட்டம்” என்பதற்கு நிகராக அம்மையார் கொடையும் அந்த மழையும் ஒன்று. இவர் எத்தனையோ வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வாழ வைத்த தெய்வம்.
திருமதி வள்ளியம்மை அம்மையாரை நான் இறுதியாகச் சந்தித்தது, “பாட்டி சொன்ன கதைகள்” நூல் வெளியீட்டிற்குச் சென்றிருந்தபோதுதான். இதுவே இறுதிச் சந்திப்பாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நூல் வெளியீட்டு நிகழ்வு நிறைவுற்றபின், நீண்டநேரம் அவருடன் உரையாடினேன். அவரது உரையாடல்; அன்றைய தினம் குறைந்திருந்தது. பேசுவதற்கு அவர் மிகவும் சிரமப்பட்டார். மூப்பு நோயால் அவர் நொந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.
“நிலா! என் உடம்புக்கு ரொம்ப முடியவில்லைப் பிள்ளை. என்னைக் கடவுள் சீக்கிரம் கொண்டு போயிடனும்.” என்று கண்கள் கரிக்க, மனம் வலிக்கச் சொன்னார். இவைதான் அவர் என்னுடன் இறுதியாகப் பேசிய வார்த்தைகள். ஆறுதலை மட்டும் அவருக்களித்து விடைபெற்ற என் மனமெங்கும் பாரம்.
இவரின் எழுத்துப்பணி மற்றும் கலைப்பணியைப் பாராட்டி வலிகாமம் மேற்குப் பிரதேச செயலகம், “கலாபூ~ணம்” விருது வழங்குவதற்குப் பரிந்துரைத்தது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை அவருக்குத் தெரிவிப்பதற்கும் அவர் தொடர்பான தகவல்களைச் சேகரிப்பதற்கும் யூன் 26ஆம் திகதி கலாசார உத்தியோகத்தர்கள் அவருடைய இல்லத்திற்குச் சென்றபோது, அவர் மண்ணுலக வாழ்வுக்கு விடைகொடுத்து விண்ணுலகம்; சென்றிருந்தார்.
பூமியில் பிறக்கின்ற அத்தனை மனிதர்களும் சிறக்கின்ற வரலாறு இல்லை. தானும் வாழ்ந்து, தக்காரையும் வாழ வைக்கும் மனிதர்களை உலகம் மறப்பதும் இல்லை. பொறையுடன் நிறைவாழ்வு வாழ்ந்த அம்மையாரையும் உலகம் மறக்காது! வரலாறும் துறக்காது!
மல்லிகா செல்வரத்தினம்