இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் மாத்திரம் இக்கூட்டத்தொடரில் காலநீடிப்பு செய்யப்படுமாக இருந்தால், போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பவற்றுக்கு அப்பால் இனவழிப்பு மற்றும் இனவழிப்பு நோக்கம் என்பன தொடர்பிலும் ஆதாரங்களைத் திரட்டுவதற்கு ஏதுவான வகையில் அச்செயற்திட்டம் மேம்படுத்தப்படவேண்டும். அன்றேல் எந்தவொரு முன்னேற்றமும் இன்றி, உள்ளகப்பொறிமுறைகளினால் ஏற்கனவே ஏமாற்றமடைந்திருக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினரை மேலும் ஏமாற்றுவதாகவே அது அமையும் என வடமாகாண முன்னாள் அமைச்சரும், வலிந்து காணாமலாக்கப்படலால் பாதிக்கப்பட்டவருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் பக்க நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இவ்விவகாரத்தை அணுகுவதற்கு அவ்விடயம் சார்ந்து முழுமையான நியாயாதிக்கத்தையும், சுதந்திரத்தையும் கொண்டிருக்கக்கூடிய சர்வதேச விசாரணைப்பொறிமுறையொன்று அவசியமாகும்.
அத்தகைய பொறிமுறையின் ஊடாக மாத்திரமே சர்வதேச நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சாட்சியங்களைத் திரட்டமுடியும். நான் இங்கு பாதிக்கப்பட்ட தரப்பினர் என்ற ரீதியில் பேசுகிறேன். போரின் இறுதி நாளில் எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் முன்னால் இலங்கைப் படையினரிடம் சரணடைந்த எனது கணவர் காணாமல்போனார்.
16 வருடங்கள் கடந்து இன்றும் நாம் உண்மைக்காகவும், நீதிக்காகவும் காத்திருக்கிறோம். எமது தாயகப்பகுதிகளில் தொடரும் இராணுவமயமாக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் என்பன உள்ளகப்பொறிமுறைகள் மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் நம்பிக்கை இழப்பதற்கு வழிகோலியிருக்கிறது.
இக்கூட்டத்தொடரில் வெறுமனே இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் மாத்திரம் காலநீடிப்பு செய்யப்படுமாக இருந்தால், போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பவற்றுக்கு அப்பால் இனவழிப்பு மற்றும் இனவழிப்பு நோக்கம் என்பன தொடர்பிலும் ஆதாரங்களைத் திரட்டுவதற்கு ஏதுவான வகையில் அச்செயற்திட்டம் மேம்படுத்தப்படவேண்டும்.
அன்றேல் எந்தவொரு முன்னேற்றமும் இன்றி, உள்ளகப்பொறிமுறைகளினால் ஏற்கனவே ஏமாற்றமடைந்திருக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினரை மேலும் ஏமாற்றுவதாகவே அது அமையும் எனச் சுட்டிக்காட்டினார்.