ஒன்றும் செய்யாத ஒபாமாவுக்கே நோபல் பரிசு கொடுத்தார்கள்… நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் – டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, இந்தியா – பாகிஸ்தான் மோதல் உள்பட 8 போர்களை நிறுத்தியுள்ளதாகவும் தமக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்து வருகிறார்.

அதேவேளை, டிரம்ப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் பரிந்துரை செய்துள்ளன. அதேவேளை, அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்த பரிசு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி வெள்ளைமாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. ஒன்றும் செய்யாத ஒபாமாவுக்கே அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்தார்கள். அவர் என்ன செய்தார் என்று அவருக்கே தெரியாது.

அவர் ஒன்றும் செய்யவில்லை நமது நாட்டை அழித்தார். நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன்’ என்றார். 2009ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமாவுக்கு கொடுக்கப்பட்டது.

ஜனாதிபதியாக பதவியேற்ற 9 மாதத்தில் ஒபாமா நோபல் பரிசு வென்றார். நாடுகளுக்கு இடையேயான ராஜாங்க ரீதியிலான உறவு மக்களிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தியதாக ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.