காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்து – ட்ரம்ப் ‘அரசியல்’ முன்னெடுப்பின் 5 முக்கிய அம்சங்கள்

எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது. அக்.7, 2023 ஹமாஸ் தாக்குதலுக்குப் பின்னர் இஸ்ரேல் கொடுத்த பதிலடியால் 68,000+ உயிரிழப்புகள், நகரெங்கும் தரைமட்டமான கட்டிடங்கள், நிற்கதியாய் நிற்கும் குழந்தைகள், பசிப் பிணியால் தவிக்கும் மக்கள் என மனிதாபிமான அவலங்கள் அத்தனை புள்ளிகளையும் ஒரே முகமாக காசா தாங்கி நிற்க, அங்கே அமைதியை ஏற்படுத்தியதாக மத்திய கிழக்கில் ஒரு பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

அமெரிக்காவில் இருந்து கிளம்பும் முன்னரே, “காசா போர் ஓய்ந்தது. இது நான் நிறுத்திய 8-வது போர்” என்று முழங்கிவிட்டு புறப்பட்ட ட்ரம்ப்புக்கு, ஒரு ஹீரோவுக்கான வரவேற்பு நல்கப்பட்டது. இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசட்டில் அவர் உரையாற்றினார். பின்னர் எகிப்தில் ஷர்ம் எல் ஷேக் நகரில் காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்தப் பயணம் முழுவதுமே ட்ரம்ப் துள்ளலான மனநிலையில் காணப்பட்டார். இந்தப் போர் நிறுத்தம், அமைதி ஒப்பந்தம் எல்லாவற்றிற்கும் தனக்கான கிரெடிட்களை கொடுத்துக்கொள்ள அவர் எந்த வாய்ப்பையும் தவறவிடவில்லை. காசா போர் முடிவுக்கு வந்தது பிராந்திய அமைதிக்கான புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்றார். ட்ரம்ப் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக முன்வைத்து ஐந்து முக்கிய விஷயங்கள் குறித்து சற்று தெளிவாகப் பார்ப்போம்.

புதிய மத்திய கிழக்கின் வரலாற்று விடியல்… – அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்கள் எப்போதுமே, வாஷிங்டன்னுக்கு நெருக்குமான, இஸ்ரேலுக்கு ஆதரவான ஒரு புதிய மத்திய கிழக்கை உருவாக்கவே விரும்பியுள்ளனர். முயன்றுள்ளனர். அதில் ட்ரம்ப்பும் விதிவிலக்கல்ல. மத்திய கிழக்கின் அமைதியும், ஸ்திரத்தன்மையும் வர்த்தகத்துக்கு, முதலீட்டுக்கும் அவ்வளவு முக்கியமானது என்பதை அமெரிக்க எப்போதும் கவனத்தில் கொண்டிருக்கிறது.

அந்த வகையில், அமெரிக்க அதிபர்கள் வரிசையில் கடைசியாக ட்ரம்ப்பும் நேற்று மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஓர் அடிப்படை மாற்றம் வர வேண்டும் என்பதைப் பற்றிப் பேசினார். “பயங்கரவாதமும், மரணங்களும் முற்றுப்பெறும் தருணம். மாறாக நம்பிக்கையும், இறையருளும் தொடங்கும் காலம். இது இஸ்ரேலுக்கும், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கும் ஒரு நீடித்த நல்லிணக்கத்தின் தொடக்கக் காலம். இது விரைவில் பிரம்மாண்டமான பிராந்தியமாகும் என்பதை நான் வலுவாக நம்புகிறேன். புதிய மத்திய கிழக்கின் வரலாற்று விடியல்” என்று மத்திய கிழக்கின் புதிய முகத்தைப் பற்றிப் பேசினார்.

அவரது பேச்சு நெடுகிலுமே, காசா அமைதி ஒப்பந்தம் ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் நிலவும் சிக்கல்களுக்குமான தீர்வு என்ற தொனியிலேயே இருந்தது. ஆனால், ‘பாலஸ்தீனர்களின் நில உரிமை மீட்கப்படும் வரை, இஸ்ரேல் அவர்களின் நிலத்தை கட்டுப்படுத்தும் வரை நீடித்த அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் வாய்ப்பில்லை’ என்கின்றனர் பாலஸ்தீன உரிமைக்காக குரல் கொடுக்கும் ஆர்வலர்கள்.

நெதன்யாகுவையும் மன்னித்து விடுங்கள்: இஸ்ரேல் – காசா ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, உள்நாட்டில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்தன. அவர் மீது அதிபர் இஅசக் ஹெர்சாக் கடும் அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில், ட்ரம்ப் தனது உரையில், பெஞ்சமின் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பெஞ்சமின் மீது விலையுயர்ந்த பரிசுப் பொருட்களைப் பெற்றதாக ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும் சூழலில், நாடாளுமன்றத்தில் பேசிய ட்ரம்ப், “அதிபர் அவர்களே, நீங்கள் ஏன் நெதன்யாகுவை மன்னிக்கக் கூடாது. சேம்பெய்ன், சிகரெட்டுகள் எல்லாம் ஒரு பொருட்டா என்ன?” என்று கேட்க.. நாடாளுமன்றத்தில் ஆதரவுக் குரல்கள் எழுந்தன.

போர்க்காலத்தின் ஒரு சிறந்த பிரதமர் நெதன்யாகு என்று சான்றிதழும் கொடுத்தார் ட்ரம்ப். அதிலும், அமெரிக்காவிடம் அதிநவீன போர்க்கருவிகளை எப்படி நெதன்யாகு பேரம் பேசி வாங்குவார் என்பதையும் சுட்டிக்காட்டிப் பேசினார் ட்ரம்ப். “எங்களிடம் அதிநவீன போர்க் கருவிகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் இஸ்ரேலுக்கு 21 பில்லியன் டாலர் மதிப்பில் போர்க் கருவிகளை வழங்கியுள்ளது” என்றார். காசாவை தரைமட்டமாக்க இஸ்ரேல் பயன்படுத்தியதில் பெரும்பான்மையானவை அமெரிக்காவிடமிருந்து பெற்ற கருவிகள் தான் என்பது இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது.

சர்வதேச அழுத்தம் மீது கவனம் தேவை: நெதன்யாகுவை புகழ்ந்து தள்ளிய அதே வேளையில், இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களுக்கு சர்வதேச அரங்கில் எழுந்துள்ளதையும் சுட்டிக் காட்டிப் பேசினார். “இந்த உலகம் பெரியது. வலுவானதும் கூட. இந்தப் போரில் வென்றது உலக நாடுகள் தான்” என்றார்.

இஸ்ரேலின் மேற்கத்திய கூட்டாளிகள் பல கடந்த சில மாதங்களாகவே பாலஸ்தீன சுதந்திர நாட்டுக்கு வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் சர்வதேச அழுத்தத்தின் பங்கை சுட்டிக்காட்டிய ட்ரம்ப், “நீங்கள் இந்தப் போரை நிறுத்த முன்வந்த தருணம் முக்கியமானது. இதை இன்னும் 2, 3, 4 ஆண்டுகளுக்கு நீங்கள் நீட்டித்திருந்தால், அது இன்னும் மோசமாக இருந்திருக்கும். இப்போது இதை நீங்கள் நிறுத்தியதால் வரலாற்றில் நினைவு கொள்ளப்படுவீர்கள் பிபி (பெஞ்சமின் நெதன்யாகுவின் செல்லப் பெயர்). இல்லையேல், கொலை.. கொலை.. கொலை என நீண்டிருக்கும். இப்போது உங்கள் முடிவால், இஸ்ரேலை எல்லோரும் மீண்டும் நேசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்” என்றார்.

மறுபுறம், இதுவரை காசாவில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்று பாலஸ்தீன உரிமை செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருவதும் கவனிக்கத்தக்கது.

பாலஸ்தீனர்களுக்கான செய்தி… – இஸ்ரேல் நாடாளுமன்ற உரையில் பாலஸ்தீனத்துக்கு ஒரு குறுஞ்செய்தியைக் கடத்தினார் ட்ரம்ப். காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் இனி ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

“பாலஸ்தீனர்களுக்கான வாய்ப்பு இப்போது தெளிவாக இருக்கிறது. அவர்களுக்கான வாய்ப்பு, பயங்கரவாதப் பாதையில் இருந்து முற்றிலும் விடுபடுவது. அவர்களுக்கு மத்தியில் இருக்கும் வெறுப்பை விதைக்கும் குழுக்களைக் கண்டு அப்புறப்படுத்த வேண்டும். மிகப் பெரிய துயரம், மரணங்கள், கடின காலங்களுக்குப் பின்னர் பாலஸ்தீனர்கள் இனி தம் மக்களை பாதுகாக்க விழைய வேண்டும். இஸ்ரேலை பழிவாங்குவதில் இருந்து திசை திரும்ப வேண்டும்” என்றார்.

இஸ்ரேல் காசாவில் நிகழ்த்திய கொடூரங்கள், அதனால் மக்கள் புலம்பெயர்ந்தது, உடைமைகளை இழந்தது, நிலங்களை இழந்தது எல்லாமே இன அழிப்பு என்று சர்வதேச நீதிமன்றம் கூறியது பற்றி ட்ரம்ப் எதுவும் பேசவில்லை.

ஈரானுக்கான சமிக்ஞைகள்: இஸ்ரேல் – காசா விவகாரத்துக்கு இடையே ட்ரம்ப், ஈரானைப் பற்றியும் பேசினார். ஈரானின் அணுசக்திக் கூடங்கள் மீது இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அவர் நியாயப்படுத்திப் பேசினார். அந்தத் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு வைக்கப்பட்ட செக் என்றார்.

ஈரானின் ராணுவத் தலைவர்கள், அணுசக்தி விஞ்ஞானிகளை இஸ்ரேல் வீழ்த்தியதற்கும் வாழ்த்து தெரிவித்தார். இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியிருக்காவிட்டால், காசா அமைதி ஒப்பந்தம் சாத்தியமாகியிருக்காது என்றார். அதேவேளையில், ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது என்றும் கூறினார். பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தால் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்வது பற்றி பரிசீலிக்கவும் தயார் என்றார்.

மொத்தத்தில், காசா அமைதி ஒப்பந்தத்துக்கு முன்னாலும், அதன் பின்னரும் ட்ரம்ப் ஆற்றிய உரைகள் அத்தனையும் மத்திய கிழக்கின் ஆபத்பாந்தவன், அமைதித் தூதர் அமெரிக்கா என்று பிரகடனப்படுத்தும் அளவில் இருந்ததாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.