பங்களாதேஷில் ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ரூப்நகர் பகுதியில் பங்களாதேஷ் வர்த்தக பல்கலைக்கழகத்துக்கு எதிரே ஒரு இரசாயன கிடங்கும், அதன் அருகே 4 மாடிகள் கொண்ட ஆடை தொழிற்சாலையும் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில், இரசாயன கிடங்கில் இரசாயன பொருட்கள் வெடித்தன. அதனால் தீவிபத்து ஏற்பட்டது.
அருகில் உள்ள ஆடை தொழிற்சாலைக்கும் தீ பரவியது. 4 மாடிகளிலும் தீப்பிடித்துக்கொண்டது. தகவல் அறிந்து 12 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தன.
அதன்பின்னர் ஆடை தொழிற்சாலையை சோதனை நடத்தியபோது, 16 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் அனைவரும் ஆடை தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆவர். ஆனால் அவர்கள் அடையாளம் காணப்படவில்லை.
இரசாயன கிடங்கில் இருந்து உருவான விஷ வாயுவை சுவாசித்தால் அவர்கள் உயிரிழந்ததாக தீயணைப்புத் திணைக்கள அதிகாரி முகமது தஜுல் இஸ்லாம் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இரசாயன கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கான காரணம், விசாரணைக்கு பின்னர் தெரிய வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சில தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் டாக்கா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டில், உணவு மற்றும் குளிர்பான தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 52 பேர் உயிரிழந்ததோடு, 20 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்துக்கு தொழிற்சாலை சட்டவிரோதமாக கட்டப்பட்டதோடு, அவசரகால வெளியேற்ற வழி இல்லை என்பது பின்னர் விசாரணையில் கண்டறியப்பட்டது.
2019 ஆம் ஆண்டில், டாக்காவில் உள்ள வரலாற்று மாவட்டத்தில் வேகமாக பரவிய தீ விபத்தில், மணமகள் வீட்டார் உட்பட குறைந்தது 78 பேர் உயிரிழந்தனர்.
பங்களாதேஷ் நாட்டில் மிகவும் மோசமான தொழிற்சாலை விபத்து 2013 இல் நடைபெற்றது. கட்டமைப்பு செயலிழப்பு காரணமாக எட்டு மாடி வணிகக் கட்டிடம் இடிந்து விழுந்து 1,100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.