பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கடந்த 14-ம் தேதி கூடியது. அன்றைய தினம் மறைந்த முக்கிய தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், வால்பாறை தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தியதும் அன்றைய கூட்டம் அத்துடன் ஒத்திவைக்கப்பட்டது. அதனையடுத்து 15-ம் தேதி (புதன்கிழமை), 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் பேரவையில் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் நடந்தது.
கேள்வி நேரம் முடிந்ததும் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், கடைசி நாளான இன்று (17-ந் தேதி) 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
அத்துடன் சட்டசபை கூட்டம் நிறைவடைந்தது. கடைசியாக பேசிய சபாநாயகர் மு.அப்பாவு, தமிழக சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்த 4 நாட்கள் கூட்டத்தில் 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அடுத்து, 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூடும். தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்