எதிர்வரும்-24 ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த மழை ஒரு புயல் அல்லது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்துடன் தொடர்புடைய மழை என்பதனால் மிக வேகமான காற்று வீசுகையோடு தொடர்புடைய மழையாக இருக்குமென யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஊடகச் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு மாகாணத்தில் தற்போது கிடைக்கும் மழை படிப்படியாக குறைவடையும். ஆனாலும், இன்றும் ஒரு சில இடங்களில் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. கிழக்கு மாகாணத்தில் இன்று இரவு முதல் படிப்படியாக மழை குறைவடையும்.
ஏற்கனவே யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் நிலம் நிரம்பு நிலையை எட்டியுள்ளது. ஆகவே, எதிர்வரும் நாட்களில் கிடைக்கவுள்ள மழை தரைக்கீழ் நீராக ஊடுவடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.




